புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது
Updated on
2 min read

புதுச்சேரி / புதுடெல்லி: புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் - திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.

இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக - அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

மே 4-ல் வாக்கு எண்​ணிக்கை: தமிழகத்​தில் ஏப்​.23-ம் தேதி​யும், மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23, 29 என 2 கட்​ட​மாக​வும் சட்​டப் ​பேரவைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு​ எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

எஸ்​ஐஆர் காரண​மாக அதி​கரிப்பு: நாடு முழு​வதும் 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்​டது. கேரளா​வில் 2.78 கோடி வாக்​காளர்​கள் இருந்​தனர். எஸ்​ஐஆர் பணி​யின்​போது போலி வாக்​காளர்கள், இரட்​டைப் பதிவு, உயி​ரிழந்​தவர்​கள் என 9.06 லட்​சம் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்து கடந்த பிப்​ர​வரி​யில் வெளி​யிடப்​பட்ட இறுதி வாக்​காளர் பட்​டியலில் 2.69 கோடி வாக்​காளர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். இந்நிலை​யில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகியுள்ளன.

அதே​போல, புதுச்​சேரி​யில் எஸ்​ஐஆர் திருத்​தத்​தின்போது 1.03 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டு, வாக்​காளர் பட்​டியலில் 9.50 லட்சம் வாக்​காளர்​கள் இடம் பெற்​றிருந்​தனர். முதல்​முறை வாக்காளர்​கள் 24,919 பேர் இருந்​தனர். கேரளா, புதுச்​சேரி​யில் எஸ்ஐஆர் காரண​மாகவே வாக்கு சதவீதம் அதி​கரித்​துள்​ள​து.

அசாமில் தேசிய குடிமக்​கள் பதிவேடு ஏற்​கெனவே சரிபார்க்கப்பட்​ட​தால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்​லை. பதிவேடு கணக்​கெடுப்​பின்​போதே போலி வாக்​காளர்​கள்​ நீக்​கப்​பட்​ட​தால்​ அங்​கு தற்போது வாக்குப்பதிவு அதி​கரித்​துள்​ள​து.

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு: வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது
கடைசி பந்தில் லக்னோ ‘த்ரில்’ வெற்றி: கொல்கத்தாவை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in