

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசியதாவது: சரியான நேரம் பார்த்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த முழு திட்டத்தையும் உருவாக்கியவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்களின் அரசியல் தந்திரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பார். இதைக் கேட்டு அமைச்சர் அமித் ஷா சிரிக்கிறார். நான் சொல்வது சரி என அவர் ஒப்புக் கொள்கிறார்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை ஆணையம் மூலம் மக்களவை இடங்களை 850-ஆக உயர்த்தப்படவுள்ளதாக இந்த மசோதா கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது நன்றாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால், இதை கவனமாக படித்து பார்த்தால் அதில் உள்ள அரசியல் தந்திரம் புரிகிறது. தற்போதுள்ள 543 மக்களவை இடங்களில் ஏன் மகளிர் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியாது? தொகுதி மறுவரையறை செய்யாமலேயே, மகளிர் ஒதுக்கீடு மசோதாவை இன்று நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
பிரதமர் உண்மையுடன் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை எடுத்திருந்தால், இந்த ஒட்டுமொத்த அவையும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்கும். இந்த மசோதாவை படித்து பார்க்கும்போது, 3 உறுப்பினர்கள் கொண்ட மறுவரையறை ஆணையம், மாநிலங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகளை முடிவு செய்யும் எனத் தெரிகிறது. மக்களை ஏமாற்றவும், நாட்டின் ஒற்றுமை மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தவும் மத்திய அரசு மீண்டும் விரும்புகிறது.
சிறு மாநிலங்களின் செல்வாக்கை குறைப்பதன் மூலமும், ஜனநாயகத்தை துண்டு துண்டாக சிதறடிப்பதன் மூலமும், அடுத்த தேர்தலுக்கு மிகப் பெரிய கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
பாஜக.வின் அரசியல் சாணக்கியர் அமித் ஷா என அனைவரும் கூறுவது வழக்கம். இந்நிலையில், “சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால், உங்களின் தந்திரத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்திருப்பார்” என பிரியங்கா காந்தி கூறியதும் மக்களவையில் இருந்த அமைச்சர் அமித் ஷா உட்பட அனைவரும் சிரித்தனர்.