

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி
வயநாடு: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது, நாட்டின் இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பிரியங்கா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்குக் காங்கிரஸ் உறுதுணையாக நின்றது. கல்விச் சீர்திருத்தங்களுக்காக நாடு தழுவிய இயக்கத்தை உருவாக்க பாடுபட்டது. வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ராகுல் காந்தி நீண்ட காலமாகப் பேசி வருகிறார்.
நாடு முழுவதும் மாணவர்களுக்கான ஆதரவை திரட்டுவதற்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் முக்கிய காரணம். காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் அணிக்கு ஊக்கம் அளித்தது.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமா ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த செய்தியைக் கேட்டதும் நான் சற்று உணர்ச்சிவசப்பட்டேன். ஏனென்றால் கடந்த 10 அல்லது 12 ஆண்டுகளில், நமது இளைஞர்கள் எப்போது விழித்துக் கொள்ள போகிறார்கள் என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டேன்.
இந்த ராஜினாமா நாடு தழுவிய மாணவர் இயக்கத்தின் வலிமையைப் பிரதிபலிக்கிறது. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் நமது நாட்டின் இளைஞர்கள் பேசிவிட்டார்கள். அவர்களின் குரலை அடக்க இனி யாரும் துணிய மாட்டார்கள். இவ்வாறு பிரியங்கா கூறினார்.