புதுடெல்லி: தரமான கல்வி இருந்தால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை சாத்தியப்படுத்த முடியும் என்று நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 48 ஆசிரியர்களுக்கு திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது, விருதாளர்களின் சாதனைகளை விளக்கும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் சமூகமே முற்போக்கான சமூகம். நாட்டின் வளர்ச்சியில் சிறந்த கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவை ஓர் அறிவுசார் சக்தியாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய திறன் மையமாகவும் நிலைநிறுத்துவதே நாட்டின் முன்னுரிமை.
அறிவே ஆற்றலின் மிகப் பெரிய மூலம். தனிநபர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தெளிவான முடிவுகளை எடுக்கவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் கல்வியே அதிகாரமளிக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களே.
நாட்டின் பெண் கல்விக்கும் பெண் உரிமைக்கும் மிக முக்கிய பங்காற்றியவர் சாவித்ரிபாய் பூலே” என தெரிவித்தார்.
இந்த ஆண்டு மூன்று துறைகளைச் சேர்ந்த 82 ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்கினார். இவர்களில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையைச் சேர்ந்த 48 ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 21 ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தைச் சேர்ந்த 13 திறன் பயிற்சியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சிங், சுகந்த மஜூம்தார், மத்திய பள்ளிக் கல்வி செயலாளர் அணில் குமார, உயர்கல்வித் துறை செயலாளர் தீப்தி கவுர் முகர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். 1952 முதல் 1962 வரை நாட்டின் துணை குடியரசுத் தலைவராகவும், 1962 முதல் 1967 வரை நாட்டின் குடியரசுத் தலைவராகவும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.