“மாணவர்கள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்க்க உதவுவீர்” - ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஆசிரியர் தின சிறப்பு பகிர்வு
“மாணவர்கள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்க்க உதவுவீர்” - ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
2 min read

புதுடெல்லி: “மாணவர்கள் அதிக நேரம் மின்னணு திரைகளைப் பார்ப்பது குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், அவர்கள் விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியு்ள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 82 ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அது குறித்த வீடியோ காட்சிகளை, ஆசிரியர் தினத்தையொட்டி அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் பிரதமர் நரேந்திர மோடி, “மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் அதேநேரத்தில், பாடப் புத்தகங்களுக்கு அப்பால் சென்று குழந்தைகளின் இயல்பான குழந்தைத் தன்மையைப் பாதுகாப்பதிலும் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கும் குழந்தையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆசிரியர்கள் உறுதிபூண வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

பாடத்திட்டத்துக்குள் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் மாறினால்தான் குழந்தைகளிடம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

குழந்தைகள் அதிக நேரம் மின்னணு திரைகளில் மூழ்குவது முக்கிய கவலையாக மாறியுள்ளது. மாணவர்கள் திரைப் பயன்பாட்டுக்கு அடிமையாவதைக் குறைக்க அவர்களை விளையாட்டு, வெளிப்புற செயல்பாடுகள், ஆக்கப்பூர்வமான முயற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

<div class="paragraphs"><p>பிரதமருடன் கலந்துரையாடிய ஆசிரியை</p></div>

பிரதமருடன் கலந்துரையாடிய ஆசிரியை

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. பெண்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. குழந்தைகள் அறியாமலேயே இதற்கு பலியாகக் கூடும் என்பதால், ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளை வகுப்பறைக்கு அப்பால் அழைத்துச் சென்று, நிஜ உலகத் திறன்களுடன் அவர்களை இணைப்பதற்கு தேசிய கல்விக் கொள்ளை அதிக முன்னுரிமை அளித்துள்ளது. சமூகத்துக்கு ஆசிரியர்கள் அளிக்கும் மகத்தான பங்களிப்பை பாராட்டுவதே ஆசிரியர் தினத்தின் நோக்கம். அத்துடன் பாரத ரத்னா டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இது அமைகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மூன்று துறைகளைச் சேர்ந்த 82 ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தேசிய ஆசிரியர் விருதுகளுக்குத் தேர்வாகி உள்ளனர். இவர்களில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையைச் சேர்ந்த 48 ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 21 ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தைச் சேர்ந்த 13 திறன் பயிற்சியாளர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த கலந்துரையாடலின்போது, விருது பெற்ற ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.

“மாணவர்கள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்க்க உதவுவீர்” - ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
“ஈரான், அமெரிக்கா இடையே நடப்பது போர் அல்ல... ராணுவ மோதல் மட்டுமே” - ட்ரம்ப்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in