

புதுடெல்லி: பெண்களின் வலிமை மற்றும் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெண்கள் தங்கள் முழு ஆற்றலை உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று பேசியதாவது: கல்வி, நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கலைகள், தொழில் முனைவு மற்றும் விளையாட்டு ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
சுய உதவிக் குழுக்கள் மூலம் ஊரக பெண்களும், பொருளாதார ரீதியாக தற்சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். கிராம வளர்ச்சி, வேலை வாய்ப்பு, ஸ்டார்ட்-அப் மற்றும் கார்ப்பரேட் துறையில் பெண்கள் தலைமை தாங்குகின்றனர். பெண்கள் தங்கள் முழு ஆற்றலை உணர வேண்டும். இவ்வாறு முர்மு கூறினார்.
பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "சர்வதேச பெண்கள் தினத்தில், நமது பெண்களுக்கு வாழ்த்துகள். அனைத்து துறையிலும், பெண்கள் உறுதியுடனும், படைப்பாற்றலுடனும், ஈடு இணையற்ற ஆர்வத்துடனும் நாட்டை முன்னேற்றம் அடையச் செய்கின்றனர்.
அவர்களின் சாதனைகள் நமது தேசத்துக்கு ஊக்குவிப்பை அளிக்கின்றன. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் நமது தீர்மானத்துக்கு வலிமை சேர்க்கின்றன. வளமான தேசத்துக்கு பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து வழிகாட்டும்" என கூறியுள்ளார்.