

கைது செய்யப்பட்ட அசோக் காரத்
நாசிக்: துருக்கி குகையிலிருந்து கிடைக்கும் அரிய வகை தேன் என்று கூறி ரூ.15 லட்சத்துக்கு விற்ற சாமியார் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ஜோதிடர் அசோக் காரத். கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அசோக், சாமியார் என்றும் ஜோதிடர் என்றும் கூறிக் கொண்டு மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு பெண் கடந்த வாரம் நாசிக் போலீஸில் அசோக் மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸார் அசோக்கை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அவர் துருக்கியிலிருந்து கிடைக்கும் அரிய வகை 'எல்விஷ்' வகை தேன் என்று கூறி ஒரு கிலோவை ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது ஒரு மாயாஜால தேன் என்றும், இதைச் சாப்பிட்டால் இளமையாக மாறிவிடலாம் என்றும் கூறியுள்ளார்.
நானும் இதைக் குடித்துப் பார்த்தேன். நீங்களும் இதைக் குடித்து பலன் பெறுங்கள் என்று தன்னிடம் வந்தவர்களிடம் கூறி அவர் ஏமாற்றியுள்ளார். மேலும், மகாராஷ்டிர அரசியல்வாதிகளும் இவருடைய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். இந்த எல்விஷ் வகை தேன் ஒரு கிலோ ரூ.9 லட்சத்துக்கு விற்பனையாகிறது. இது துருக்கியின் ஆர்ட்வின் நகரிலுள்ள 1,800 மீட்டர் ஆழத்திலுள்ள குகையிலிருந்து எடுக்கப்படுகிறது.
அந்தப் பெயரைக் கூறி இவர் ஏராளமான தேன் வகைகளை இங்கு விற்று பலரை ஏமாற்றியுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளோம். அவரது வீடு அருகே துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.