

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு, கூட்டத்துக்குள் சிக்கிக் கொண்டதன் காரணமாகவே, காவலர் ஒருவர் ஏ.கே.-47 துப்பாக்கியால் 4 முறை சுட்டதாக பிஹார் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து, பிஹாரில் கடந்த மாதம் 25-ம் தேதி பந்த் நடைபெற்றது. அப்போது, சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, பிஹார் ஆயுதப்படை காவலர் ஒருவர் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, பிஹார் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மாணவர் போராட்டத்தின் போது, அபிஷேக் குமார் என்ற காவலர் போராட்டக்காரர்களால் சூழப்பட்டதால் கூட்டத்துக்குள் சிக்கிக் கொண்டதால், நிலைமையை சமாளிப்பதற்காக தனது ஏ.கே.-47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக, சிவான் மாவட்ட எஸ்பி பூரண் குமார் ஜாவை பிஹார் அரசு பதவி நீக்கம் செய்துள்ளது.
இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் போது நடைபெற்ற காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.