உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் உருவாக்கம்: தமிழக அரசு முடிவு

உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் உருவாக்கம்: தமிழக அரசு முடிவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, ‘வெற்றித் தமிழகம்’ எனும் பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் துறைகள் வாரியாக 436 தொலைநோக்குத் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறையில் அனைவருக்கும் குடிநீர், வீடு, சேதமற்ற சாலைகள், அனைத்து ஊராட்சிகளையும் இணைக்கும் சாலைகள், கிராமப்புற ஊரக வேலை உறுதித் திட்டம், 5,000 கிராமங்களுக்கு நகர்ப்புற கட்டமைப்பு, கிராமப்புற தொழில் உள்கட்டமைப்புத் திட்டம், கிராமப்புற சந்தைகள் ஆகிய 8 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, பெருநகரங்களை ஒட்டிய கிராமங்களில் தொழில் வளர்ச்சி, குடியிருப்புகள் விரிவாக்கம், விவசாய நிலங்கள் பயன்பாடு மாற்றம் ஆகியவற்றால் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துவருகிறது.

ஆனால், இந்தப் பகுதிகள் குடிநீர், சாலை, வடிகால், திடக்கழிவு மேலாண்மை மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இதை சரி செய்ய நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம் உருவாக் கப்படுகிறது.

673 நகர்ப்புற ஊராட்சிகள்

சென்னை, நீலகிரி தவிர்த்துள்ள 36 மாவட்டங்களில் உள்ள 4,923 கிராம ஊராட்சிகளில், 673 நகர்ப்புற ஊராட்சிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றின் நிர்வாகத் திறனை நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம் மூலமாக மேம்படுத்த மாநில, மாவட்ட, வட்டார, கிராம அளவில் புதிதாக 4,490 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதன்படி மாநில அளவில் 99, மாவட்ட அளவில் 767, ஊராட்சி ஒன்றிய அளவில் 738, கிராம ஊராட்சி அளவில் 2,886 பணியிடங்கள் உருவாக் கப்பட உள்ளன. இதற்கான செலவினமாக ஆண்டுக்கு ரூ.107 கோடியை மாநில அரசு ஒதுக்கும்.

இந்த துறை அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக 20 வாகனங்கள் ரூ.2.4 கோடியில் வாங்கப்பட உள்ளன. அதேபோல், கிராம ஊராட்சி அளவில் உருவாக்கப்படும் 2,886 பணியிடங்களுக்கான செலவினம் ரூ.16.55 கோடியை, அந்தந்த கிராம ஊராட்சிகளின் நிதியில் இருந்தே பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது. இவ்வாறு ஊரக வளர்ச்சி துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் உருவாக்கம்: தமிழக அரசு முடிவு
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ், அதிமுக கடும் விவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in