

ஜம்மு: பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதியில் சிக்காமல் இருக்க, தெரியாத செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜம்முவில் போலீஸ் ஐ.ஜி. (ஜம்மு மண்டலம்) தேஜிந்தர் சிங் கூறியதாவது:
பாகிஸ்தான் உளவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் ஊடுருவி தகவல்களை சேகரிக்க முயன்று வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் உள்ளவர்களிடம் நெருக்கமாக பழகியும், பாலியல் ரீதியான உறவுகளை ஏற்படுத்தியும் முக்கியமான தகவல்களைப் பெற அவர்கள் முயன்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தெரியாத எண்களிலிருந்து வரும் செல்போன் அழைப்புகளை ஏற்க வேண்டாம். அந்த நபர் தெரிந்தவர் என்றால் மட்டுமே நீங்கள் பேச வேண்டும். அறிமுகமில்லாத நபர்கள் மிகச் சிறிய தகவல்களைக் கேட்டால் கூட, அவற்றைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளிநாட்டு எண்களிலிருந்து அழைப்புகள் வந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.