

புதுடெல்லி: பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி பஞ்சாப் மக்களின் விருப்பமான தேர்வாக உருவெடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுடன் சிரோமணி அகாலி தளம் மீண்டும் கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த கூட்டணி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளிட்டுள்ள பதிவில், ‘பஞ்சாபுக்கும் பஞ்சாப் மக்களின் நலன்களுக்கும் முன்னுரிமை!
ஸ்ரீ குரு நானக்கின் பிறந்த நன்னாளில் சிரோமணி அகாலி தளம் மீண்டும் என்டிஏ குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
எங்களுடையது ஒரு இயல்பான கூட்டணி. இது பஞ்சாபுக்கு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை உறுதி செய்வதோடு, மாநிலத்தை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும்.
அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட அகாலி தளம் - பாஜக கூட்டணி, காலத்தின் சோதனையைத் தாங்கி நிலைத்து நின்ற ஒன்றாகும். எங்கள் கூட்டணி பஞ்சாப் மக்களின் விருப்பமான தேர்வாக உருவெடுக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து 24 ஆண்டுகள் நீடித்திருந்த சிரோமணி அகாலி தளம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூட்டணியில் இருந்து விலகியது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி இந்த முடிவை எடுத்தது.
அந்த மூன்று சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதை அடுத்து, இரு கட்சிகளும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு குறித்து பரவலாகப் பேசப்பட்டது.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்விரு கட்சிகளும் தற்போது கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளன.
முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் வரவேற்றார். அப்போது, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்பை அடுத்து, இருதரப்பும் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட அமித் ஷா, “வர உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் கூட்டணியாகப் போட்டியிடும். இன்று குரு புரப் நன்னாள். இந்த நன்னாளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த கூட்டாளியாக இருந்த சிரோமணி அகாலி தளம், மீண்டும் நம்முடன் இணைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சுக்பிர் சிங் பாதல், அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோருக்கு இடையே பல ஆண்டுகளாக ஆழமான பிணைப்பு உள்ளது. அதேபோல, பாஜகவுக்கும், அகாலி தளத்துக்கும் இடையிலும் மிக நெருக்கமான உறவு உள்ளது.” என தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்தது குறித்து பேசிய சுக்பீர் சிங் பாதல், “இது வெறும் அரசியல் கூட்டணி மட்டுமல்ல. இதற்கொரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு உண்டு. பாஜக - அகாலி தளம் இடையிலான உறவு பிரிக்க முடியாத, ஆழமான பிணைப்பு கொண்டது என எனது மறைந்த தந்தை பிரகாஷ் சிங் பாதல் அடிக்கடி கூறுவார். இது பஞ்சாபின் நலனுக்காகவும், சீக்கிய சமூகத்தின் நலனுக்காகவும் அமைக்கப்பட்ட கூட்டணி.
இந்த கூட்டணி எவ்வளவு நீண்ட காலம் நீடித்தது என்பதையும் இதன்மூலம் எத்தனை அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன என்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்” என தெரிவித்தார்.