

புதுடெல்லி: பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான பலன் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜகவும் அகாலி தளமும் கைகோத்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நவீன் மற்றும் அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் இந்த கூட்டணியை இன்று அறிவித்தனர்.
இந்த கூட்டணியை 'இந்து-சீக்கிய சகோதரத்துவத்திற்கு' ஒரு எடுத்துக்காட்டாக நிதின் நவீன் விவரித்தார். அகாலி தளத்துடனான நீண்டகால உறவைச் சுட்டிக்காட்டிய அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப்பழமையான கூட்டாளி மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது குடும்ப உறவுகளையும், பஞ்சாப் குறித்த தனது அனுபவங்களையும் சுக்பீர் சிங் பாதல் பகிர்ந்து கொண்டார். வேளாண் சட்டங்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் முறிந்த கூட்டணி, மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் 38 சதவீத இந்துக்களும், 58 சதவீத சீக்கியர்களும் வசிப்பதால், இந்தக் கூட்டணி இந்து-சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளின் இணைப்பு, அரசியல் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இரு கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டணியை ஒரு இயல்பான கூட்டணி என்று அழைத்தாலும், இது ஒரு அவசியமான கூட்டணியாகவும் கருதப்படுகிறது. ஏனெனில், பஞ்சாபில் இரு கட்சிகளும் பிரிந்த பிறகு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.
கடந்த 2017-இல், இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டபோது, அகாலி தளம் 25.42 சதவீத வாக்குகளையும் 15 எம்எல்ஏக்களையும் பெற்றது. அதே சமயம், பாஜக 5.43 சதவீத வாக்குகளுடன் வெறும் 3 எம் எல் ஏக்களை மட்டுமே பெற்றது.
இதனால், அப்போது பஞ்சாபில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சியை இழந்தாலும், ஒரு கவுரவமான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பின்னர், இருவரும் பிரிந்த பின் 2022 தேர்தலின் போது நிலைமை முற்றிலும் மாறியது.
சிரோமணி அகாலி தளம் பஞ்சாபின் 97 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 18.52 சதவீத வாக்குகளுடன் மூன்று எம்எல்ஏக்களை மட்டுமே பெற்றது. அகாலி தளம் 28.61 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அந்த வாக்குகள் தேர்தல் வெற்றியாக மாறவில்லை.
பல தொகுதிகளில் பாஜகவின் இந்து வாக்குகள் கிடைக்காமல் போனதே, ஒட்டுமொத்த கூட்டணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பகுதிகளிலும் கூட்டணிக்கு இருந்த சாதகமான சூழல் பறிபோனது.
2017 மற்றும் 2022 -க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் சூழல் பெருமளவு மாறியிருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. வரும் 2027 இல் மீண்டும் அதே போன்றதொரு நிலை ஏற்படுவதை இரு கட்சிகளும் விரும்பவில்லை.
கூட்டணி முறிந்ததால், இரு கட்சிகளின் வாக்கு சதவீதமும் சரிந்தன. 2017 இல் 25 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அகாலி தளம், 2022 இல் 18 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக, தற்போதைய சூழலின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து, இரு கட்சிகளும் மீண்டும் இணைந்துள்ளன. சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் கணிசமான வாக்குகளைப் பெற, இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியமாகி விட்டது.
இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக அகாலி தளம் உள்ளது. பாஜக அதன் இளைய சகோதரராகவே இருக்கிறது. இருவரும் இணைந்து மொத்தம் உள்ள 117 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். அநேகமாக, பாஜக 39 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் 78 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாபில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி உள்ளது.