போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சு: 90 லட்சம் இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை

பாதுகாப்பு அமைச்சரவைக் குழு அவசர ஆலோசனை
போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சு: 90 லட்சம் இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை
Updated on
2 min read

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமாக நடந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அந்த நாடுகளில் வசிக்கும் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவசர ஆலோசனை நடத்தியது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய மோடி, விரைவில் போர் நிறுத்தம் செய்து, அமைதியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினார்.

அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்பதை ஏற்க மறுத்த ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் இணைந்து போர் தொடுத்தன. இந்த தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ள அண்டை நாடுகளான கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

350 விமான சேவைகள் ரத்து: இதனால், மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள 11 நாடுகளில் வான்எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்திய விமான நிறுவனங்கள் 350 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் 90 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களது பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு நேற்று முன்தினம் இரவு அவசர ஆலோசனை நடத்தியது.

24 மணிநேர உதவி மையங்கள்: வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, அவசரநிலை ஏற்பட்டால் மீட்பதற்கான ஏற்பாடுகளை செய்வது ஆகியவை குறித்து இதில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரான், இஸ்ரேலின் டெல் அவிவ், அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் 24 மணி நேர உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடல்சார் வர்த்தக வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தலைவர்களிடம் கோரிக்கை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து கவலை தெரிவித்தார். இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வலியுறுத்திய மோடி, போர் நிறுத்தம் செய்து விரைவில் அமைதியை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல, ஐக்கிய அரபு அமீரகத்தலைவர் ஷேக் முகமது பின் ஜயீத்அல்நஹ்யானுடனும் பிரதமர் மோடி பேசினார். அந்நாட்டின் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு துணை நிற்பதாகவும் தெரிவித்தார். அங்கு இந்தியர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார். மத்திய கிழக்கில் அமைதி, நிலைத்தன்மை ஏற்பட இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.

பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இஷா அல் கலிபாவிடம், தாக்குதல் குறித்த தனது கவலையை தெரிவித்த பிரதமர் மோடி, அங்கு உள்ள இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண மோடி வலியுறுத்தல்: டெல்லியில் இந்தியா - கனடா இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்திருக்கிறது. உலகம் முழுவதும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எந்த பிரச்சினைக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை, ராஜ்ஜிய ரீதியிலான அணுகுமுறை மூலமாக மட்டுமே தீர்வு காணவேண்டும்.

இந்தியா, கனடா மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. தீவிரவாதத்தை வேரறுக்கவும், உலகில் அமைதி நிலைக்கவும் இந்தியாவும், கனடாவும் ஒன்றிணைந்து செயல்படும். இந்தியப் பெருங்கடல் - பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் ஏற்கெனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சு: 90 லட்சம் இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை
வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்து தாக்குவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in