

ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்களை சந்திக்க 'சாய்வாலா' வந்துள்ளேன்” என்று தெரிவித்தார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை அலுவலகம் ரோமில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “மே 21-ம் தேதி சர்வதேச தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதற்கு ஒரு நாள் முன்னதாக உங்களை சந்திக்க ‘சாய் வாலா' வந்துள்ளேன். இந்தியாவில் பல்வேறு வகையான தேநீர் உள்ளன. எங்களது தேநீர் சுவை, மணம், திடம் நிறைந்தது” என்று தெரிவித்தார்.
‘சாய் வாலா' வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி கூறியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நெதர்லாந்துடன் ஒப்பந்தங்கள்
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக நெதர்லாந்தின் ஏஎஸ்எம்எல் நிறுவனம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் இணைந்து குஜராத்தில் புதிய செமிகண்டக்டர் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
குஜராத்தில் தயாரிக்கப்பட உள்ள செமிகண்டக்டர்களை மொபைல்போன், கார்களில் பயன்படுத்த முடியும். சுவீடன் நாட்டில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தபோது அந்த நாட்டுடன் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கப்படும் என்று சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் உறுதி அளித்துள்ளார்.
ஐஎம்இசி வழித்தட திட்டம்
நார்வே நாட்டில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக இந்தியாவின் சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின் சக்தி, அணு சக்தி உற்பத்தி துறைகளில் முதலீடு செய்ய நார்வே உறுதி அளித்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கு கூடுதலாக எல்பிஜி காஸை விநியோகிக்க நார்வே உறுதி அளித்திருக்கிறது. இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்தபோது, இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா வழித்தட திட்டத்தை (ஐஎம்இசி) நிறைவேற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டன.
இந்த ஒப்பந்தம் இந்தியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இடையிலான வர்த்தகத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும்.
கைகோக்கும் ஐரோப்பா பிரதமர் மோடியின் ஐரோப்பிய நாடுகள் பயணம் குறித்து யூரோ நியூஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஐரோப்பாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் (அமெரிக்கா) எங்களை விட்டு விலகிச் செல்கின்றன.
இந்த நேரத்தில் இந்தியா உடனான நட்புறவு மிகுந்த முக்கியத்துவம் பெற்று உள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு, வர்த்தகம் சார்ந்த துறைகளில் இந்தியாவுடன் கைகோத்து செயல்பட ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன” என கூறப்பட்டுள்ளது.