

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது.
இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். ஏனெனில் லீக் சுற்றில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றில் 2 வாய்ப்புகள் கிடைக்கும். தகுதி சுற்று 1-ல் தோல்வி அடைந்தால் தகுதி சுற்று 2-ல் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி அணியானது அதிரடியான பேட்டிங், நேர்த்தியான பந்துவீச்சு ஆகியவற்றால் தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பையை வெல்லக்கூடிய வலுவான அணியாக உருவெடுத்துள்ளது. பேட்டிங்கில் சீனியர் நட்சத்திரமான விராட் கோலி 13 ஆட்டங்களில் ஒரு சதம், 4 அரை சதங்களுடன் 542 ரன்களை குவித்துள்ளார். இளம் இடதுகை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் 3 அரை சதங்களுடன் 412 ரன்கள் சேர்த்துள்ளார்.
புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியும் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த சீசனில் 13 ஆட்டங்களில் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் புவனேஷ்வர் குமார், புதிய பந்தில் தொடர்ந்து மாயாஜாலம் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார், அதே நேரத்தில், ஹேசில்வுட் முக்கியமான தருணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
கிருணல் பாண்டியாவும் தனது ஆல்-ரவுண்ட் திறமையால் ஈர்த்துள்ளார். அவர், தனது பந்துவீச்சில் நுணுக்கமான மாறுபாடுகளைக் காட்டி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். லெக்-ஸ்பின்னர் சுயாஷ் சர்மா, ஆல்-ரவுண்டர் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹெய்ன்ரிச் கிளாசன் ஆகியோரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். இந்த பேட்டிங் வரிசை ஆர்சிபி பந்துவீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
பந்துவீச்சில் இஷான் மலிங்கா, பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை பாட்கம்மின்ஸ் கேப்டனாக சரியாக கையாண்டு வருகிறார். ஷிவாங்க் குமார், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியாரும் பந்துவீச்சில் கைகொடுத்து வருகின்றனர்.