

கோப்புப்படம்
புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள்) திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதன்படி, இனி இந்த திட்டம் ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா’ என்று அழைக்கப்படும். வேலை நாட்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று கூறியதாவது: ஒரு காலத்தில் தோல்வியின் சின்னம் என்று இந்த திட்டத்தை பிரதமர் அழைத்தார். இப்போது அந்த புரட்சிகரமான திட்டத்துக்கு பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார். இது இந்தியாவின் ஆன்மா குடியிருக்கும் கிராமங்களில் இருந்து மகாத்மா காந்தியை அழிப்பதற்கான மற்றொரு வழி.
இந்த நடவடிக்கை, இந்த திட்டம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதை மூடிமறைப்பதற்கான ஒரு வெற்று ஒப்பனை மாற்றத்தை தவிர வேறில்லை. மேலும் இந்த திட்டத்துக்கு மெதுவான மரணத்தை ஏற்படுத்துவதற்காக கவனமாகத் திட்டமிடப்பட்ட ஓர் உத்தியாக இது தெரிகிறது. உண்மையில், இந்த அரசுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நோக்கம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.