

பிரயாக்ராஜ்: பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வருமானம் ஈட்டும் அந்தப் பெண் தனது உண்மையான சம்பளத்தை மறைத்துவிட்டதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அங்கித் ஷா என்பவருக்கு கவுதம புத்த நகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அங்கித் ஷா மேல்முறையீடு செய்தார்.
அவரது தனது தரப்பில், “வருமானம் ஈட்டுவதை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மனைவி மறைத்து விட்டார். பின்னர் விசாரணையில் அதை ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அவர் தூய்மையான கரங்களுடன் விசாரணை நீதிமன்றத்துக்கு வரவில்லை” என வாதிட்டார்.
இவ்வழக்கில் குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி மதன் பால் சிங் ரத்து செய்தார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
அப்பெண் தனது கல்வித் தகுதியாக முதுகலை பட்டம் மற்றும் வெப்டிசைனர் முடித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறுக்கு விசாரணையில் மாதம் ரூ.36,000 சம்பாதிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். வேறு எந்தப் பொறுப்பும் இல்லாத மனைவிக்கு இந்த தொகை சொற்பமானது என கூற முடியாது; அதே சமயம், மனுதாரருக்கு தனது வயதான பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பும் மற்ற சமூக கடமைகளும் உள்ளன.
அந்தப் பெண் சம்பாதிப்பவர் என்பதாலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் திறன் கொண்டவர் என்பதாலும் தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறத் தகுதியற்றவர் ஆகிறார். மேலும் உண்மைக்கு மதிப்பளிக்காத மற்றும் முக்கிய உண்மைகளை மறைப்பவர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.