

புதுடெல்லி: நாடு முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. கேரள குழந்தை ஆலின் போல பலரும் உறுப்பு தானம் செய்து, ஏராளமான மக்களுக்கு 2-வது வாழ்க்கையை அளித்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரை இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதன்படி நேற்று ஒலிபரப்பான 131-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சிஇஓக்கள், ஏஐ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் இந்த உச்சி மாநாடு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.
டெல்லி மாநாட்டில் 2 அரங்குகள் உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தன. முதல் அரங்கு அமுல் நிறுவன அரங்கு ஆகும். விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏஐ பயன்பாடு குறித்து அங்கு தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. 2-வது அரங்கம், நமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. ஏஐ தொழில்நுட்ப உதவியோடு நமது பண்டைய நூல்கள், நமது தொன்மையான ஞானம், ஓலைச் சுவடிகளை எவ்வாறு பாதுகாத்து வருகிறோம் என்பது இந்த அரங்கில் விளக்கப்பட்டிருந்தது. ஏஐ மூலம் இந்தியாவின் பண்டைய நூல்கள், ஓலைச் சுவடிகளை எந்த மொழியிலும் மொழிபெயர்க்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
இதன்மூலம் இந்தியாவின் தொன்மையை டிஜிட்டல் வடிவில் அறிந்து கொள்ள உலகத் தலைவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். மாநாட்டில், இந்தியா சார்பில் 3 ஏஐ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மூலம் இந்தியாவின்தொழில்நுட்பத் திறன் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டுள்ளது.
தற்போது உலகக்கோப்பை டி20 போட்டிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. கனடா, அமெரிக்கா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பலநாடுகளின் அணிகளில் இந்திய வம்சாவளியினர் விளையாடி வருகின்றனர். அவர்களது பெயர், மொழியில் இந்தியாவின் மணம் வீசுகிறது. இந்திய வம்சாவளி மக்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்களோ, அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமை நாம் இழந்துவிட்டோம். அந்த குழந்தையின் பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கும் வலி, துயரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆழ்ந்த துயரத்திலும் ஆலினின் தந்தை அருண் ஆபிரகாம், தாய் ஷெரின் ஆகியோர் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். அவர்களது பெருந்தன்மையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஒருபுறம் மகளை இழந்த துக்கத்தில் வாடினாலும், மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம் அவர்களுக்குள் நிரம்பிஇருந்தது.
நாடு முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதன்மூலம் பலரும் பயனடைந்து வருகின்றனர். கேரளாவின் ஆலின்போல பலரும் உறுப்பு தானம் செய்து, ஏராளமான மக்களுக்கு 2-வது வாழ்க்கையை அளித்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரை இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன்.
நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. மாணவர்களே, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். படித்ததை முழு மனதோடு எழுதுங்கள். படிப்பிலும், வாழ்விலும் நீங்கள் புதிய சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.
ராஜாஜி சிலை இன்று திறப்பு: குடியரசுத் தலைவர் மாளிகையில் பிப்.23-ம் தேதி (இன்று) ராஜாஜி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாளிகையின் மையப் பகுதியில் அவரது உருவச் சிலை திறக்கப்படும். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. அதிகாரத்தை பதவியாக அல்லாமல், சேவையாகப் பார்த்தவர். இவரது நடத்தை, ஒழுங்குமுறை, சுதந்திரமான நிலைப்பாடு ஆகியவை இன்றும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.
சுதந்திரத்துக்குப் பிறகும்கூட, குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசத் தலைவர்களுக்கு இடம் அளிக்காமல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரான எட்வின் லுட்யன்ஸ் சிலை, குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இருந்த இடத்தில் ராஜாஜி சிலைவைக்கப்படும். ராஜாஜியை மையப்படுத்தி பிப்.24 முதல் மார்ச் 1 வரை நடைபெறும் சிறப்பு கண்காட்சியை அனைவரும் பார்வையிட வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
‘மக்கள் போற்றும் மகத்தான தலைவர்’ - ஜெயலலிதாவுக்கு புகழாரம்
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: சிலர் எப்போதும் மக்களின் இதயங்களில் நீங்காமல் குடிகொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஜெயலலிதா. மக்கள் போற்றும் மகத்தான தலைவராக விளங்குகிறார். பிப்.24 அவரது பிறந்தநாள். அவர் மீது தமிழக மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் ஈடுபாடு ஆழமானது. அவர் முதல்வராக இருந்தபோது பெண்கள், தாய்மார்கள், சகோதரிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சட்டம் - ஒழுங்கை சீராக வைத்திருந்தார்.
இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் மீது மிகுந்த பெருமிதம் கொண்டிருந்தார். அவரிடம் தேசபக்தி உணர்வு மிகவும் செறிவாக இருந்தது. எண்ணம் தெளிவாக இருந்தது. கருத்துகள் நிறைவாக இருந்தன. ஜெயலலிதா உடனான என்னுடைய ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும் என் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளன. அவருடைய நட்புணர்வை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.