

புதுடெல்லி: இரவு நேரத்திலும், மேக கூட்டத்திலும் தெளிவாக படம் பிடிக்கும் ‘திருஷ்டி’ செயற்கை கோளை, கேலக்ஸ்-ஐ என்ற இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்- அப் நிறுவனம் கேலக்ஸ்-ஐ ‘திருஷ்டி’ என்ற புவி கண்காணிப்பு செயற்கை கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கன் 9’ ராக்கெட் மூலம் விண்ணுக்கு நேற்று அனுப்பியது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா (Multispectral camera) மற்றும் சின்தெடிக் அபார்ச்சர் ரேடார் (SAR) இமேஜர் ஆகிய இரண்டும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த செயற்கைக் கோள், மேகக்கூட்டங்கள் மற்றும் இருளை ஊடுருவி மிக தெளிவான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும்.
இதனால் இது இந்திய செயற்கைக் கோள்களில் தனித்துவமானது. இதன் தரவுகள் உளவுத் தகவல்களுக்கு பயன்படுத்தப் படலாம் என்பதால், இந்த செயற்கை கோள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு புது தலை வலியாக அமையும் என கூறப்படுகிறது.
இது குறித்து கேலக்ஸ்-ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுயாஷ் சிங் கூறியதாவது: திருஷ்டி செயற்கைக் கோளுக்கான யோசனை இந்தியாவின் புவியியல் மற்றும் கால நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு. மேற்கத்திய நாடுகளை விட இங்கு மேகங்கள் அதிகம். மேற்கத்திய நாடுகள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டதில்லை. இங்கு மேகமூட்டம் அடிக்கடி மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால், வழக்கமான ஆப்டிகல் செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பலனற்றதாகி விடுகின்றன.
எந்தவொரு நேரத்திலும் பூமியின் நிலப்பரப்பில் 70 சதவீதம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். கடல் பகுதிகளில் இது 90 சதவீதமாக இருக்கும். எனவே, குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளில் பத்து படங்களில் ஏழு படங்கள் மேகமூட்டத்துடனேயே இருக்கும். செயற்கைக் கோள் தரவுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மேகங்கள் வெறும் இடையூறு மட்டுமல்ல, அவை ஒரு திரையைப் போன்றது. தெளிவான படங்கள் கிடைக்காது.
பேரிடர் மேலாண்மை, விவசாயம், உள்கட்டமைப்பு கண்காணிப்பு அல்லது பாதுகாப்பு போன்ற பணிகளுக்கு தெளிவான படங்கள் மிகவும் அவசியம். இதற்காகவே மேகங்களை ஊடுருவிப் பார்த்து துல்லியமான தகவல்களைப் பெறும் தொழில்நுட்பத்தை கேலக்ஸ்-ஐ உருவாக்கியுள்ளது. திருஷ்டி செயற்கைக் கோளில் உள்ள மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் சின்தெடிக் அபார்ச்சர் ரேடார் இமேஜர் எதையும், எல்லாவற்றையும் ஊடுருவிப் பார்க்கும் திறன் பெற்றது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சாதனையை பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயற்கை கோள் ஏற்கெனவே இருந்திருந்தால், ‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகளின் போது குண்டு வீச்சினால் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட, அமெரிக்காவின் வணிக ரீதியான செயற்கைக் கோள்களைச் சார்ந்திருக்காமல், இந்தியாவே தரமான படங்களைப் பெற்றிருக்க முடியும். தற்போது இந்தியாவிடம் இந்த செயற்கைக் கோள் உள்ளது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு புதிய தலை வலியை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.