

அமராவதி: ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக டீசல் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் கனரக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். தலைமை செயலர் சாய்பிரசாத் மற்றும் மூத்த அதிகாரிகள், அமைச்சர்களுடன் அமராவதியில் அவர் அவசர ஆலோசனை நடத்தினார். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து உடனடியாக பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.