இந்துக்களை போல முஸ்லிம் பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்துக்களை போல முஸ்லிம் பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Updated on: 
2 min read

புதுடெல்லி: இந்து பெண் வாரிசுகளுக்கு உள்ளதைப் போல இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் அவர்களது பூர்வீகச் சொத்தில் சம பங்கு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தக் கோரி இம்தியாஸ் உசேன் ஷஹாபுதீன் முல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முஸ்லிம் வாரிசுரிமைச் சட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு நிலவுவதாகப் புகார்கள் உள்ளன. ஆண் வாரிசுகளைப் போல் பெண் வாரிசுகளுக்கு பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்கப்படுவதில்லை. ஆண் வாரிசுகளுக்கு அளிக்கப்படுவதில் பாதி பங்கு மட்டுமே முஸ்லிம் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் ஷரீயத் சட்டப்பட்டி இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், இதை எதிர்த்து இம்தியாஸ் உசேன் ஷஹாபுதீன் முல்லா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், ‘முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் வாரிசுரிமை விவகாரத்தில் பாலினப் பாகுபாடு உள்ளது. பூர்வீகச் சொத்தில் முஸ்லிம் பெண்களுக்கு, ஆண்களுக்கு இணையான உரிமை இல்லை. இது சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் செயல்.

பூர்வீகச் சொத்துக்கான உரிமை உட்பட, வாரிசுரிமை மற்றும் சொத்துரிமை விஷயங்களில் நமது நாட்டில் இந்துப் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. அதேபோல், முஸ்லிம் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ப ஷரியத் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீது பதில் அளிக்க வலியுறுத்தி மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து மனுதாரரான இம்தியாஸ் உசேன் ஷஹாபுதீன் முல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், “முஸ்லிம் பெண்கள் பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொது நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதே இந்த மனுவின் நோக்கம்.

அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஏறக்குறைய 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. சொத்துரிமையில் பெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

தற்போது ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதியளவே பெண்களுக்குக் கிடைக்கிறது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். இந்துப் பெண்களுக்குக் கிடைப்பதைப் போல் இவர்களுக்கும் சம பங்கு கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கிருஷ்ணா எம். சிங், கூறுகையில், “தற்போது மகன்களுக்குக் கிடைக்கும் பங்கில் பாதியளவே பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

எனவே, பூர்வீக மற்றும் தந்தைவழிச் சொத்துக்களில் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் வகையில் ஷரியா சட்டத்தைத் திருத்துமாறு உச்ச நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்விஷயத்திலும் சமத்துவம் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்துக்களை போல முஸ்லிம் பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
3 மாதங்களில் 377 புகார்கள் - டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in