

டிசிபிசிஆர் தலைவர் ஓம் பிரகாஷ் வியாஸ்
புதுடெல்லி: டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் 3 மாதங்களில் 377 புகார்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் போக்ஸோவில் 38 மற்றும் 17 குழந்தைகள் காணாமல் போனதாகவும் வழக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி ஆணையம் (டிசிபிசிஆர்) கடந்த 3 மாதங்களில் பதிவான வழக்குகளை வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்தம் 377 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் போக்சோ சட்டத்தின் கீழ் 38 வழக்குகளும் அடங்கும். இது குறித்து டிசிபிசிஆர் தலைவர் ஓம் பிரகாஷ் வியாஸ் கூறுகையில், ‘கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான புகார்களே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. மொத்த புகார்களில், 206 புகார்கள் கல்வி உரிமைச் சட்டம் சார்ந்தவை.
அடுத்த நிலையில், சிறார் நீதி தொடர்பாக 87 புகார்களும், 38 போக்சோ வழக்குகளும், காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக 17 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இத்துடன், குழந்தைத் தொழிலாளர் தொடர்பான 16 வழக்குகளும், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான 13 புகார்களும் பதிவாகியுள்ளன. 56 வழக்குகளை ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.
டெல்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல் துணை ஆணையருக்கு டிசிபிசிஆர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேபோல், ஆணையத்தின் முன்னெடுப்புகள் குறித்து டிசிபிசிஆர் தலைவர் வியாஸ் கூறுகையில், “டெல்லி முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டாய மற்றும் வழக்கமான தற்காப்புக் கலைப் பயிற்சிகளை நடத்த வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக துணைநிலை ஆளுநர், முதல்வர், டெல்லி முனிசிபல் கார்பரேஷனின் மேயர் அல்லது ஆணையர் ஆகியோருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடையே போக்சோ குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆணையம் நடத்தி வருகிறது. இப்பிரச்சாரம் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல், குற்றங்களைப் புகாரளித்தல் மற்றும் மனநல ஆலோசனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மூலம், குழந்தைகளை மீட்பது மற்றும் குழந்தை பிச்சைக்காரர்கள் இல்லாத டெல்லியை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.” எனத் தெரிவித்தார்.