

புதுடெல்லி: அமெரிக்கா, ஈரான் போர் காரண மாக நாடு முழுவதும் வணிக, வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண குழாய் வழி காஸுக்கு (பிஎன்ஜி) மாற வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அழைப்பு விடுத்தது.
தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் பிஎன்ஜி காஸுக்கான குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. எல்பிஜி சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நகரங்களில் குழாய் வழி பிஎன்ஜி காஸுக்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் மாறி வருகின்றனர்.
கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும்போது எல்பிஜி சமையல் காஸ் கிடைக்கிறது. இது புரோப்பேன், பியூட்டேன் வாயுக்களின் கலவை ஆகும். இதற்கு மணம் கிடையாது. ஆனால் எல்பிஜி கசிவை கண்டறிய ஈத்தைல் மெர்கேப்டன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதன்மூலமே எல்பிஜி காஸ் கசிவை கண்டறிய முடிகிறது.
பிஎன்ஜி காஸ் என்பது இயற்கை எரிவாயு ஆகும். பெரும்பாலும் மீத்தேன் எரிவாயு ஆகும். நிலத்தடியில் உள்ள இயற்கை எரிவாயு கிணறுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் வீடுகள், ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 50% பிஎன்ஜி காஸ் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “https://mypngd.in/ என்ற இணையதளத்தில் நுழைந்து உங்களது மொபைல் போன் எண் அல்லது எல்பிஜி இணைப்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் சரண்டர் செய்வதற்கான விருப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் வீட்டில் இருந்தபடியே எளிதாக எல்பிஜி இணைப்பை துண்டிக்கலாம். இதர நடவடிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிகளே மேற்கொள்ளும்” என கூறப்பட்டு உள்ளது.