

கொல்கத்தா: ஹூக்ளி ஆற்றில் துர்கா சிலைகளைக் கரைக்கும்போது, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே சிலைகளைத் தொட அனுமதிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் பாபுகாட்டில் துர்கா தேவி சிலைக் கரைப்பு ஏற்பாடுகளை முதல்வர் சுவேந்து அதிகாரி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது: ஹூக்ளி ஆற்றில் துர்கா சிலைகளைக் கரைக்கும்போது, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே சிலைகளைத் தொட அனுமதிக்கப்படுவார்கள். மத மரபுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
ஹூக்ளி ஆற்றுக்குள் சிலைகளைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுபவர்களின் அடையாளங்களை சரிபார்க்க வேண்டும் என்று காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். சிலைக் கரைப்பு நிகழ்ச்சியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், வேதங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இது ஒரு திருவிழா என்றாலும், முதன்மையாக இது ஒரு மத நிகழ்ச்சியாகும். இவ்வாறு அவர் கூறினார். மகாசப்தமி தினமான கடந்த 17-ம் தேதி மாலை, கொல்கத்தாவின் சோர்பாகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சிலைக் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் அதிகரித்துள்ளது.