மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலே தேசவிரோதமா? - அண்ணாமலை கேள்வி

மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலே தேசவிரோதமா? - அண்ணாமலை கேள்வி
Updated on: 
1 min read

சென்னை: ‘மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலே தேசவிரோத முத்திரையா?’ என்று ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2011-ம் ஆண்டில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, டெல்லி ராமலீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக அமைதியான வழியில் போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை கடுமையாகக் கண்டித்தார்.

அப்போது, ‘என் கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், நானும் டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராகப் போராடியிருப் பேன்’ என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஜனநாயக ரீதியாக விதி மீறல்கள் குறித்து கேள்வி கேட்டாலே உடனடியாக ‘வெளிநாட்டு ஏஜென்ட்’ என முத்திரை குத்தப்படுகிறது.

நீட் தேர்வுப் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கூறியதிலிருந்தே என் மீதும் தொடர் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

சிஜேபி அமைப்பின் போராட்ட அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஒரு பிரச்சினைக்காக குரல் கொடுக்கவும், போராடவும் அவர்களுக்கு முழு உரிமை உண்டு. எனவே, மத்திய அரசு வழக்கம்போல திசைதிருப்பும் உத்திகளைக் கையாளாமல் எனது கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும்.

டெல்லி காவல்துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றும் ஒருவரே, சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவராகவும் செயல்பட்டு, தடுப்புக் காவலில் வைப்பது குறித்து முடிவெடுப்பது எந்த வகையில் நியாயமாகும்? நீட் போராட்டத்தின்போது டெல்லி காவல்துறை பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக எழுந்த புகார் மற்றும் எஸ்.ஓ.பி விதிமீறல்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினாலோ, விமர்சனம் வைத்தாலோ, அதை ‘தேசவிரோதம்' என்றும், ‘வெளிநாட்டுச் சதி' என்றும் முத்திரை குத்துவது மிகவும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

டெல்லியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, தனது அரசியல் இருப்பையும் முக்கியத்துவத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக எப்போதும் தனக்குத்தானே ஓர் எதிரியை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய அரசியல் அணுகுமுறை ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலே தேசவிரோதமா? - அண்ணாமலை கேள்வி
ஜோதிட நாள்காட்டி 22.10.2026 | ஐப்பசி 05 - வியாழக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in