

சென்னை: பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட நான்கில் ஒரு வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2014 ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் 12 ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்தது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்த அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் அறியும் வகையில் சமூக செயல்பாட்டாளர் சந்திர சேகர் கவுர் என்பவர் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவை துறை மூலம் விளக்கம் கொடுப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர்கள் அளித்துள்ள தகவலின் படி சுமார் 59.03 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவற்றில் ரூ.3.15 கோடி இருப்புத் தொகை (பேலன்ஸ்) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 32.89 கோடி வங்கிக் கணக்குகளை பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும், 26.14 கோடி கணக்குகளை ஆண்களும் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 5.72 கோடி வங்கிக் கணக்குகள் பூஜ்யம் இருப்புத் தொகையை (Zero Balance) கொண்டுள்ளது. இதில் உத்தர பிரதேச மாநிலம் 95.92 வங்கிக் கணக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிஹார், மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
மேலும், 15.36 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
ஜன் தன் வங்கிக் கணக்கு அதிகம் கொண்டுள்ள மாநிலங்கள்
>> உத்தர பிரதேசம் - 10.51 கோடி
>> பிஹார் - 7.01 கோடி
>> மேற்கு வங்கம் - 5.73 கோடி
>> ராஜஸ்தான் - 3.87 கோடி
>> மகாராஷ்டிரா - 3.85 கோடி
ஜன் தன் வங்கிக் கணக்கு
நிதிசார் உள்ளடக்கத்தை அடைவதற்கான உலகின் மிகப்பெரிய முன்முயற்சியான பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கான வங்கிச் சேவை அணுகலை வழங்குவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது எளிய மக்களுக்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந்த வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டுடன் கூடிய 41.29 கோடிக்கும் அதிகமான ரூபே அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைகளுக்காக ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதியும் இதில் அளிக்கப்படுகிறது.