3 மாநிலங்களில் 4 வாக்காளர் அட்டை: பிரகாஷ் ராஜுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

3 மாநிலங்களில் 4 வாக்காளர் அட்டை: பிரகாஷ் ராஜுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்
Updated on
1 min read

பெங்களூரு: ஒரே நேரத்தில் மூன்று மாநிலங்களில், நான்கு வெவ்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் மூன்றாவது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் பலமுறை சமன்ஸ் மற்றும் வாரண்ட்களை அனுப்பியும் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அப்போது, அவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பல இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக வழக்கறிஞர் கே.திலீப் குமார் என்பவர் பெங்களூரு ஹலசூரு கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பெங்களூருவின் சாந்தி நகர் தொகுதி, சென்னை வேளச்சேரி தொகுதியில் இருவேறு இடங்கள் மற்றும் தெலங்கானாவின் சேரிலிங்கம்பள்ளி தொகுதி என மொத்தம் மூன்று மாநிலங்களில் பிரகாஷ் ராஜின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், 2023-ல் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது.

முதலில் பிப்ரவரி 17 அன்று அனுப்பப்பட்ட நீதிமன்ற சம்மனை அவர் வாங்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்ட முகவரியை விட்டு காலி செய்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 17 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் இருமுறை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டும் பிரகாஷ் ராஜ் ஆஜராகவில்லை. தற்போது ஜூன் 12 அன்று நீதிமன்றம் மூன்றாவது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை மீண்டும் பிறப்பித்துள்ளதுடன், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தன் மீதான இந்த நீதிமன்ற வாரன்ட் செய்திகளை பிரகாஷ்ராஜ் முற்றிலும் மறுத்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இவை அனைத்தும் திட்டமிட்டுப் பரப்பப்படும் போலிச் செய்திகள் என்றும், தமக்கு தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், நீதிமன்ற ஆவணங்களின்படி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கைது நடவடிக்கையைத் தவிர்க்க பிரகாஷ் ராஜ் தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

3 மாநிலங்களில் 4 வாக்காளர் அட்டை: பிரகாஷ் ராஜுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்
முதல்வர் விஜய் ஆக்‌ஷனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ரியாக்‌ஷனும் சரியா? - ஒரு ‘மாண்புமிகு’ பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in