

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
நாக்பூர்: “வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) சட்ட மசோதா (எஃப்சிஆர்ஏ) தேசவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது என்றும், எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் குறிவைப்பதற்காக அல்ல என்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாக்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்காக திருத்தப்பட்ட புதிய எஃப்சிஆர்ஏ விதிகளை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும்போது, தாங்கள் மேற்கொள்ளும் பணிகளின் நோக்கத்தையும் செயல்படும் துறையையும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
சில அமைப்புகள் எஃப்சிஆர்ஏ-வைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பணத்தைக் கொண்டுவந்து, அதைத் தேசவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றன. அதைக் கட்டுப்படுத்தவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. சட்டப்பூர்வமாகவும் நல்ல முறையிலும் பணியாற்றும் அமைப்புகளுக்கு இந்த மசோதாவால் எந்தவிதத் தடையும், சிரமமும் ஏற்படாது. வரவு செலவுக் கணக்குகளைச் சரியாகப் பராமரிப்பவர்கள் தங்களது உரிமத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும்.
மேலும், இந்த சட்டத்தைப் பற்றித் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கலாம். மத்திய அரசு அனைவரின் கருத்துகளையும் கேட்கும் திறந்த மனதுடன் இருக்கிறது. இந்தச் சட்டம் அனைத்து சமூகங்கள் மற்றும் அமைப்புகளுக்கும் பொதுவானதே தவிர, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானது அல்ல” என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.