“கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்

“கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்
Updated on
2 min read

புதுடெல்லி: ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் இருக்கும் கடைசி குண்டு தீரும் வரை, கடைசி வீரர் உள்ள வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சயீத் கத்தீப்சாதே தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து வான் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கத்தீப்சாதே, “ஈரானும் இந்தியாவும் ஒரே நாகரிக வேர்களைக் கொண்டவை. நாம் இந்தோ-பாரசீக கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கலாச்சார-நாகரிக பாரம்பரியத்துடன் இணங்கும் வகையில், ஈரான்-இந்தியா உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.

தற்போது ஈரானின் முக்கிய முன்னுரிமை தாக்குதல் நடத்தும் எதிரிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துவது. அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. அவர்கள் ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் கடைசி குண்டு இருக்கும் வரைவும், கடைசி வீரர் இருக்கும் வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது எங்களின் வீரம் மற்றும் தேசிய உணர்வுக்கான போராட்டமாகும். ஈரானுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரங்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்து இந்திய தரப்புடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “ஆம். இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். மற்றவர்களுடனும் சிறிய உரையாடலை மேற்கொண்டேன். இந்த விவகாரத்தில் முக்கியமானது என்னவென்றால், அனைவரும் சர்வதேச சட்டத்தை மதிக்கும் அதே வேளையில், சர்வதேச சட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துவது என்பது கூடாது.

துரதிர்ஷ்டவசமாக, சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த கொடூரங்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அமெரிக்கர்கள் மற்றொரு நாட்டின் தலைவரை கொலை செய்துள்ளனர். இது ஒரு புதிய வழக்கமாக மாறினால், உலகில் எந்த நாடும் மற்ற நாடுகளுடன் இயல்பான தூதரக உறவுகளை பேண முடியாது.” என தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதலில் ஈரான் போர் கப்பல் மூழ்கிய சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “இது மிகவும் துயரமான, வருத்தமான சம்பவம். அந்த கப்பல் எங்கள் இந்திய நண்பர்களின் அழைப்பின் பேரில் ஒரு சர்வதேச பயிற்சியில் கலந்து கொள்ள வந்தது. அது ஒரு விழாக்கால நிகழ்வாக இருந்தது. கப்பலில் ஆயுதங்களும் இல்லை, சரக்குகளும் இல்லை. இந்த சம்பவம் மிகவும் வருத்தமானது. அந்த பயிற்சியில் கலந்து கொண்ட பல இளம் ஈரான் கடற்படையினர் உயிரிழந்தனர். இதை செய்தவர்களுக்கு நாங்கள் நிச்சயம் தண்டனை அளிப்போம்.” என கூறினார்.

மேலும் அவர், “எங்கள் நாடு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஈரான் அச்சுறுத்தலாக இருந்தது என்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் இது நடக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஏன் தாக்குதலை தொடங்கினார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்த கேள்வியை அமெரிக்க நிர்வாகத்திடம் கேட்டால், அவர்கள் எந்த மக்களிடம் பேசுகிறார்கள் என்பதற்கேற்ப வேறு வேறு பதில்களை வழங்குவார்கள். இது அதிகார அரசியல். அதோடு, ‘அகண்ட இஸ்ரேல்’ என்ற மாயக் கற்பனை காரணமாகவே இது தொடங்கப்பட்டது.

எங்களுக்கு இது எதிர்ப்புக்கான போராட்டமாகும். வரலாற்றுக்காகவும், இந்த பிராந்தியத்துக்காகவும், உலகுக்காகவும், சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்காகவும், நெறிமுறைகளுக்காகவும் நடக்கும் போராட்டம் இது. நாங்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவோம். இது வரலாற்றில் பதிவாகும். கட்டுப்பாடற்ற, பொறுப்பற்ற செயல்கள் ஈரானுக்கு எதிராக நடைபெறுவதால் ஈரான் மக்கள் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நிறுத்தப்படும் தருணத்தில் இந்தப் பிராந்தியத்தில் புதிய மாற்றம் உருவாகும் என்று நான் நம்புகிறேன்.

அமெரிக்கா ஈரான் என்ற நாட்டின் இருப்பை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ‘அகண்ட இஸ்ரேலை உருவாக்குவோம்’ என்று இஸ்ரேலியர்கள் பல பத்தாண்டுகளாக வாக்குறுதியாக அளித்து வருகின்றனர். எனவே பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என தெரிவித்துள்ளார்.

“கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்
தொடர் சரிவில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,280 குறைவு - இன்றைய விலை நிலவரம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in