எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - மம்தா பானர்ஜி தகவல்

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - மம்தா பானர்ஜி தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்’’ என்று மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்த எஸ்ஐஆர் பணியை நிறுத்தக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்துப் பேசினர்.

இதன்பிறகு நிருபர்களிடம் மம்தா பேசும்போது, “தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்த போது அவமானப்படுத்தப்பட்டோம்" என்று குற்றம் சாட்டினார். எஸ்ஐஆர் பணியை நிறுத்தக் கோரி மம்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சூழலில் முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்கு வங்கம், தமிழகம், கேரளாவில் மட்டும் வாக்களர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெறுகிறது. ஆனால், பாஜக ஆட்சி நடத்தும் அசாமில் எஸ்ஐஆர் பணி நடத்தப்படவில்லை. ஏனென்றால் அங்கு இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறுகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் ஏராளமானோர் ஊடுருவி வருவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்திய, வங்கதேச எல்லையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் மத்திய அரசு, மேற்கு வங்க அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 58 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் தற்போது டெல்லிக்கு வந்துள்ளனர். தேவைப்பட்டால் எஸ்ஐஆர் பணியால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை டெல்லிக்கு அழைத்து வருவோம்.

எஸ்ஐஆர் பணியை நிறுத்தக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 6 கடிதங்களை அனுப்பி உள்ளேன். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அப்போதும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இப்போதைய சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், எங்களிடம் போதிய எம்.பி.க்களின் பலம் இல்லை. எனவே, ஒத்த கருத்துடைய கட்சிகளிடம் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - மம்தா பானர்ஜி தகவல்
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எதிரொலியாக பங்குச் சந்தையில் எழுச்சி: ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in