‘நச்சுத்தன்மையை பரப்புகிறார்’ - டாடா குழும விவகாரத்தில் ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

‘நச்சுத்தன்மையை பரப்புகிறார்’ - டாடா குழும விவகாரத்தில் ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: அவநம்பிக்கையையும் நச்சுத்தன்மையையும் ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்த நிலையில், அவரது இந்த கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘ஒவ்வொரு பிரச்சினையையும் நீங்கள் அரசியலாக்குகிறீர்கள். இதை தவிர்க்குமாறு கோருகிறேன். வணிகம் மற்றும் சட்ட விஷயங்களை கிரிமினல் என்று நீங்கள் முத்திரை குத்துவதை ஏற்க முடியாது.

இந்திய தொழில்துறையின், நமது தொழில்முனைவோரின் வெற்றிகளை நீங்கள் மீண்டும் மீண்டும் கண்டித்துள்ளீர்கள். இப்போது அவநம்பிக்கையையும் நச்சுத்தன்மையையும் பரப்புவதில் உங்களுடன் சேருமாறு நமது வணிக தலைவர்களையும் தூண்ட முயல்கிறீர்களா?

பல பத்தாண்டுகளாக, லைசன்ஸ் - கோட்டா ராஜ்ஜியத்தின் மூலம் இந்திய தொழில்முனைவோரின் மன உறுதியை நசுக்கி, கோடிக்கணக்கான இந்தியர்கள் மீது வறுமையை திணித்தது உங்கள் கட்சி. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எங்கள் அரசு, இந்திய தொழில் துறையை வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், பொருளாதார வளர்ச்சியை இயக்குபவர்களாகவும் மதிக்கிறது.

தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், தொழில் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் ஏற்ப மத்திய அரசின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நமது தொழில்துறைக்கு ஆதரவளிப்பதற்கும், நமது விவசாயிகளை வலுப்படுத்துவதற்கும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குமான பொறுப்பு அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசாங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உண்டு. உங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதை விடுத்து, ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் அனைத்து குடிமக்களுக்கும் நீதியை உறுதி செய்கிறது. மேலும், நமது நீதிமன்றங்கள் அதை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளன. நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமர்களும் நீதித்துறையை எவ்வளவு கேவலமான முறையில் இழிவுபடுத்தினீர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. எனவே, எங்கும் இருளைப் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராகுல் காந்தி வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ‘டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து எந்த ஒரு வணிக தலைவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

இன்னும் எவ்வளவு காலம் இவ்வாறு மவுனமாக இருக்கப் போகிறீர்கள்? அவர்கள் உங்களை முழுமையாகக் கையகப்படுத்தும் வரை காத்திருக்கப் போகிறீர்களா?

இந்திய வணிக உலகம் என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களிடம் துணிச்சல் இல்லை. ஆனால், எங்களிடம் இருக்கிறது. இந்த அநீதிகளக்கு நாங்கள் நீதியை பெற்றுத் தருவோம்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நச்சுத்தன்மையை பரப்புகிறார்’ - டாடா குழும விவகாரத்தில் ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
டாடா குழுமம் சீரழிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
‘நச்சுத்தன்மையை பரப்புகிறார்’ - டாடா குழும விவகாரத்தில் ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in