மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு
Updated on: 
2 min read

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60%-ல் இருந்து 63% ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 60 சதவீதத்துடன் கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால், சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இந்த உயர்வு 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவை உயர்தர விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் 2033-34 வரையிலான எட்டு ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக ரூ.1,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் விக்சித் கிராம ஸ்வராஜ் திட்டத்தை மத்திய நிதி உதவி பெறும் திட்டமாக செயல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. விக்சித் பாரத் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பஞ்சாயத்துக்களை அதிகாரமளிக்கப்பட்ட, சுயசார்பு கொண்ட, பொறுப்புக்கூறக் கூடிய, சிறப்பாக செயல்படக் கூடிய உள்ளூர் சுய அரசு அமைப்புகளாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 வரை ஐந்து ஆணடுகளுக்குச் செயல்படுத்தப்படும். இதற்காக மொத்தம் ரூ.7,395 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். இத்திட்டத்தின் மூலம், சுமார் 32 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் நேரடியாக பயனடைவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு
அர்னாப் புயல்: ஆந்திராவில் மூவர் உயிரிழப்பு; தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்டிலும் பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in