டாடா குழுமம் சீரழிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி, அமித் ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல என சாடல்
டாடா குழுமம் சீரழிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய வணிக உலகம் என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருட்கள் அல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து எந்த ஒரு வணிக தலைவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

இன்னும் எவ்வளவு காலம் இவ்வாறு மவுனமாக இருக்கப் போகிறீர்கள்? அவர்கள் உங்களை முழுமையாகக் கையகப்படுத்தும் வரை காத்திருக்கப் போகிறீர்களா?

இந்திய வணிக உலகம் என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களிடம் துணிச்சல் இல்லை. ஆனால், எங்களிடம் இருக்கிறது. இந்த அநீதிகளக்கு நாங்கள் நீதியை பெற்றுத் தருவோம்’ என தெரிவித்துள்ளார்.

பின்னணி: இந்​தி​யா​வின் முன்​னணி மற்​றும் மிகப் ​பெரிய தொழில் குழு​ம​மான டாடா குழு​மத்​தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறு​வனத்​தின் தலை​வ​ராக தமிழகத்​தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் 2017-ல் பொறுப்பேற்​றார். அவருடைய தற்போதைய பதவிக்​காலம் 2027 பிப்​ர​வரி 20-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது.

இந்நிலையில், சந்​திரசேகரனின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்​டிக்க கடந்த பிப்​ர​வரி மாதம் 24-ம் தேதி நடை​பெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழு கூட்​டத்​தில் தீர்​மானம் முன்​வைக்​கப்​பட்​டது. ரத்​தன் டாடா​வின் சகோதரர் நோயல் டாடா தீர்மானத்துக்கு எதி​ராக வாக்களித்​ததால் தீர்​மானம் நிறைவேற்றப்​பட​வில்​லை.

இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்​வதற்​கான பணி​களை டாடா சன்ஸ் வாரியக் குழு தொடங்​கியது. இந்நிலை​யில், மும்​பை​யில் செப்.17-ல் நடை​பெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழுக் கூட்​டத்​தில், அதன் தலை​வ​ராக சந்​திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்​டு​களுக்கு பதவி நீட்​டிப்பு வழங்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது.

இதற்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66% பங்குகளைக் கொண்டுள்ள டாடா அறக்கட்டளை, சந்திரசேகரனின் நியமனத்துக்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரை மீண்டும் நியமித்தது சட்டவிரோதமானது என்று தெரிவித்தது.

மேலும், “ஒரு தலை​வரின் நியமனத்​துக்​கு, அறக்​கட்​டளை​யின் நியமன இயக்​குநர்​களில் பெரும்​பான்​மை​யானோர் ஆதர​வாக வாக்​களிக்க வேண்​டும் என டாடா சன்ஸ் நிறுவனத்​தின் விதி​கள் கூறுகின்​றன.

இந்த நிபந்​தனை முதல் நியமனத்​துக்​கும், மறு நியமனத்துக்​கும் பொருந்​தும். அறக்​கட்​டளை​யின் நியமன இயக்​குநர்​களில் ஒரு​வ​ரான நோயல் டாடா, பதவி நீட்​டிப்பு தீர்​மானத்​துக்கு எதி​ராக வாக்​களித்​த​தால், அந்த நியமனம் சட்டப்படி செல்லாது” என்றும் தெரிவித்திருந்தது.

இந்த பின்னணியில், ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமம் சீரழிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
முன்னணி பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in