காஞ்சிப் பட்டுடன் வந்த நிர்மலா சீதாராமன்: 9 பட்ஜெட்டுகள், 9 கைத்தறி புடவைகளின் ஸ்பெஷல்!

காஞ்சிப் பட்டுடன் வந்த நிர்மலா சீதாராமன்: 9 பட்ஜெட்டுகள், 9 கைத்தறி புடவைகளின் ஸ்பெஷல்!
Updated on
2 min read

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பட்டுப் புடவையை அணிந்து வந்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், ஒவ்வொரு முறையும் நாட்டின் கைத்தறி பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புடவைகளை அணிந்து வருவது வழக்கம்.

இன்று, நிர்மலா சீதாராமன் அடர் இளஞ்சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்திருந்தார். ஊதா நிற கட்டம் போட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், இளம் பொன் பழுப்பு நிற பார்டர் இடம்பெற்றிருந்தது. இந்த மெஜந்தா நிற சேலையில் ஊதா நிற பார்டர் உள்ளது. இது ஒரு கம்பீரமான, ஆனால் பாரம்பரிய தோற்றத்தை வெளிபடுத்துகிறது. அத்துடன் நிர்மலா சீதாராமன் அடர் நிற கம்பளி சால்வையும், மஞ்சள் நிற ஸ்வெட்டரும் அணிந்திருந்தார். பட்டு மற்றும் நுணுக்கமான கைவினைத்திறனுக்காக புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கைத்தறி நெசவுகளில் ஒன்றாகும்.

தமிழகம் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை அணிந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் தாக்கலின்போது கைத்தறி மற்றும் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப் புடவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

2019-ல் தனது முதல் பட்ஜெட்டின் போது, ​​அவர் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற மங்களகிரி ( ஆந்திரா) புடவையை அணிந்தார்.

2020-ல் மஞ்சள், பொன்னிறம் மற்றும் பச்சை கலந்த பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

2021-ல் சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சல் நிற வடிவியல் கோலங்கள் கொண்ட போச்சம்பள்ளி இக்கத் (தெலங்கானா) புடவையைத் தேர்வு செய்திருந்தார்.

2022-ல் ஒடிசா மாநில கைவினைஞர்களின் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில், பழுப்பு நிற பொம்காய் புடவையை அணிந்திருந்தார்.

2023-ல் கர்நாடகாவின் கசூதி எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மற்றும் கோயில் கோபுர சித்திரங்கள் கொண்ட இல்கல் சிவப்பு நிறப் புடவையை அணிந்தார்.

2024-ல் இடைக்கால பட்ஜெட்டுக்கு மேற்கு வங்கத்தின் நீல நிற தசர் மற்றும் காந்தா வேலைப்பாடுகள் கொண்ட புடவை அணிந்திருந்தார்.

2024 பொது பட்ஜெட்டுக்கு ஊதா நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற மங்களகிரி (ஆந்திரா) புடவை அணிந்திருந்தார்.

2025-ல், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி பரிசளித்த தந்த நிற மதுபானி கை ஓவியப் புடவையை அவர் அணிந்திருந்தார். மதுபானி ஓவியம் பிஹார் மாநிலத்தின் முக்கியமான கலைப்படைப்பாக உள்ளது.

2025ல் பிஹார் தேர்தல் நடக்கவிருந்த சூழலில் அம்மாநில பாரம்பரிய புடவையும் அணிந்திருந்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்துள்ளார்.

காஞ்சிப் பட்டுடன் வந்த நிர்மலா சீதாராமன்: 9 பட்ஜெட்டுகள், 9 கைத்தறி புடவைகளின் ஸ்பெஷல்!
மத்திய பட்ஜெட் 2026-27: முக்கிய அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in