மத்திய பட்ஜெட் 2026-27: முக்கிய அம்சங்கள்

தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றமில்லை!
மத்திய பட்ஜெட் 2026-27: முக்கிய அம்சங்கள்

தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றமில்லை!

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, ​​புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 லட்சம் வரை மொத்த வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக விலை குறையும் பொருட்கள்:

  • 17 புற்றுநோய் மருந்துகள்

  • மின்சார வாகன பேட்டரிகள்

  • விளையாட்டு உபகரணங்கள்

  • சோலார் பேனல்கள்

  • ஸ்மார்ட் போன்கள்

  • தோல் உபகரணங்கள்

  • மைக்ரோவேவ் ஓவன்கள்

  • லித்தியம் பேட்டரி பாகங்கள்

  • சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்

  • 7 உயிர்காக்கும் மருந்துகள்

  • நீரிழிவு தொடர்பான மருந்துகள்

  • வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்

  • வெளிநாட்டு கல்வி

  • மதுபான கழிவுகள்

  • காலணி பாகங்கள் ஏற்றுமதி

  • மைக்ரோவேவ் ஓவன்

  • தோல் ஏற்றுமதி

எவற்றின் விலை அதிகமாகும்?

  • சிகரெட்

  • பீடி

  • பான் மசாலா

  • குட்கா

  • இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்​களவை​யில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்​ஜெட்டை தாக்கல் செய்த அவர் வெளியிட்ட அறிவிப்புகள்...

“12 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பதவியேற்றதில் இருந்து ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், நீடித்த வளர்ச்சி, மிதமான பணவீக்கம் ஆகியவற்றைக் கொண்டதாக நாட்டின் பொருளாதாரப் பாதை வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமற்ற மற்றும் இடையூறான காலங்களில்கூட நாங்கள் எடுத்த விவேகமான முடிவுகளின் விளைவால் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் உள்ளது” என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் தொலைநோக்குடைய கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். பொது முதலீட்டில் வலுவான கவனத்தை செலுத்தி, தற்சார்பை தூணாகக் கொண்டு, நிதிசார் விவேகத்துடன் நிலைத்தன்மையை பேணி வருகிறோம். நாங்கள் உள்நாட்டு உற்பத்தித் திறனை வளர்த்துள்ளோம். எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். முக்கியமாக இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்துள்ளோம்.”

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

‘தற்சார்பு இந்தியா’ என்பதை வழிகாட்டியாகக் கொண்டு, இறக்குமதிச் சார்புகளை குறைத்துள்ள அதே நேரத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய உற்பத்தித்திறன், குடும்பங்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து நாட்டு மக்கள் பயனடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இந்த நடவடிக்கைகள் சுமார் 7% என்ற உயர் வளர்ச்சி விகிதத்தை வழங்கியுள்ளன. மேலும், வறுமைக் குறைப்பு மற்றும் நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கணிசமான முன்னேற்றங்களை அடைய எங்களுக்கு உதவியுள்ளன: நிர்மலா சீதாராமன்

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நிலைநிறுத்தவும், ஆறு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன். அவை:

  1. ஏழு முக்கியத் துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல்

  2. பாரம்பரிய தொழில் துறைகளுக்கு புத்துயிர் ஊட்டுதல்

  3. வெற்றிகரமான சிறு, குறு, நடுத்தர தொழில்களை (MSME) உருவாக்குதல்

  4. உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல்

  5. நீண்டகால பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல்

  6. நகர பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல்

பயோ பார்மா சக்தி திட்டம்: இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்துவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் ‘பயோ பார்மா சக்தி’ திட்டம் முன்மொழியப்படுகிறது.இது உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அதற்கு இணையான மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஏற்ற ஒரு சூழல் அமைப்பை உருவாக்கும்.

எதிர்காலச் சாதனையாளர்களை உருவாக்க, ரூ.10,000 கோடியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி நிதி அமைப்பு.

உயர்தர விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு பிரத்யேக முன்னெடுப்பு முன்மொழியப்படுகிறது.

பிரம்மாண்ட ஜவுளிப் பூங்காக்கள்:

சவாலான முறையில் பிரம்மாண்ட ஜவுளிப் பூங்காக்களை அமைக்கப்படும். காதி மற்றும் கைத்தறித் தொழில்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்னெடுப்பு தொடங்கப்படும்.

உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த திட்டம்:

கட்டுமானங்களுக்கும், உள்கட்டமைப்புகளுக்கும் தேவைப்படும் உயர் மதிப்புள்ள, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் வகையில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தீயணைப்பு உபகரணங்கள் முதல் மின்தூக்கிகள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கு துளையிடும் இயந்திரங்கள் வரை பரந்த அளவில் இத்தகைய உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க இந்த திட்டம் வழிவகுக்கும்.

மூன்று கடமைகள்:

கர்தவ்ய பவனில் தயாரிக்கப்பட்ட முதல் பட்ஜெட் இது என்பதால், நாங்கள் மூன்று கடமைகளால் உத்வேகம் பெறுகிறோம். அவை:

1) உற்பத்தித் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும், நிலையற்ற உலகளாவிய சூழல்களுக்கு எதிரான மீள்திறனை உருவாக்குவதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதும் நிலைநிறுத்துதல்.

2) நமது மக்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதும், அவர்களின் திறனை வளர்ப்பதும், நாட்டின் செழிப்பில் அவர்களை வலிமையான பங்காளராக மாற்றுவதலும்.

3) ‘அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஒவ்வொரு குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், பிராந்தியத்துக்கும் வளங்கள், வசதிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்தல்.

பிரத்யேக அரிய வகை கனிம வழித்தடங்கள்:

அரிய வகை காந்தங்களுக்கான ஒரு திட்டம் 2025-ல் தொடங்கப்பட்டது. தற்போது, ​​கனிம வளம் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிரத்யேக அரிய வகை கனிம வழித்தடங்களை அமைப்பதற்கு உறுதுணையளிகக் நாங்கள் முன்மொழிகிறோம்.

‘இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0’-ஐ நாங்கள் தொடங்குவோம். தொழில்நுட்பத்தையும் திறமையான பணியாளர்களையும் உருவாக்குவதற்காகத் தொழில் துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களிலும் கவனம் செலுத்துவோம்.
நிர்மலா சீதாராமன்

நிலையான நீண்ட கால முதலீடுகளை ஈர்க்க வேண்டும்:

வர்த்தகமும், பன்முகத்தன்மையும் ஆபத்தில் இருக்கும் ஓர் அந்நிய சூழலை நாம் எதிர்கொள்கிறோம். வளங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான அணுகல் தடைபட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தி அமைப்புகளை மாற்றி வருகின்றன. நீர், மின்சாரம், முக்கிய கனிமங்கள் ஆகியவற்றுக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகின்றன.

இந்தியா லட்சியத்தையும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்தபடி, வளர்ந்த இந்தியாவை நோக்கிய நம்பிக்கையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும்.

வர்த்தகமும் மூலதனத் தேவைகளும் வரிவடைந்து கொண்டே இருக்கின்றன. இந்தச் சூழலில், உலகளாவிய சந்தைகளுடன் ஆழமாக ஒருங்கிணைந்து, அதிக அளவில் ஏற்றுமதி செய்து, நிலையான நீண்ட கால முதலீடுகளை நாம் ஈர்க்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பிரத்யேக பாதை: சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கிழக்கில் உள்ள டான்குனியையும் மேற்கில் உள்ள சூரத்தையும் இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் அமைக்கப்படும்.

> தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை கூட்டவும், ‘தேங்காய் ஊக்குவிப்புத் திட்டம்’ முன்மொழியப்படுகிறது. இந்த திட்டத்தில், தேங்காய் அதிகம் விளையும் மாநிலங்களில் உற்பத்தி செய்யாத மரங்களை அகற்றுவது மற்றும் அங்கு புதிய மரக்கன்றுகளை நடுவது ஆகியவையும் அடங்கும்.

> 2030-ஆம் ஆண்டுக்குள் முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யவும், ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கவும், இந்திய முந்திரி மற்றும் இந்திய கோகோவை உலகளாவிய பிராண்டுகளாக மாற்றவும் இந்திய முந்திரி மற்றும் கோகோவுக்கு ஒரு பிரத்யேக திட்டத்தம் கொண்டுவரப்படுகிறது.

கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture Utilization and Storage) தொழில்நுட்பங்களில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம், பல்வேறு பயன்பாடுகளில் இந்தத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடு, உயர் தயார்நிலை நிலைகளையும் அடைய முடியும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறை வளர்ந்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறைக்கு 20 லட்சம் நிபுணர்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC கன்டென்ட் கிரியேட்டர் ஆய்வகங்களை மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமைக்கும்.

விளையாட்டுத் துறையை மாற்றி அமைக்க ஒரு திட்டம்:

விளையாட்டுத் துறை பலதரப்பட்ட வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட விளையாட்டுத் திறமைகளை முறையாக வளர்க்கும் பணியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றி அமைப்பதற்காக ‘கேலோ இந்தியா’ திட்டம் தொடங்கப்படும்.

நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை:

அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். முதல் கட்டமாக இதில் 5 நீர்வழித்தடங்கள் ஒடிசாவில் அமைக்கப்படும். தால்சேர் மற்றும் அங்குல் போன்ற கனிம வளம் நிறைந்த பகுதிகளையும், கலிங்கநகர் போன்ற தொழில்துறை மையங்களையும் பாராதீப் மற்றும் தம்ரா துறைமுகங்களுடன் இணைக்கப்படும். உள்நாட்டு நீர்வழிகளுக்கான கப்பல் பழுதுபார்க்கும் சூழலமைப்பு வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் மாவட்டம்தோறும் ஒரு பெண்கள் விடுதி அமைக்கப்படும்.

உயர் கல்வித் துறையில் முதலீடு செய்வதன் மூலம் புதிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக நகரங்கள், பெண்கள் விடுதிகள் மற்றும் தொலைநோக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் விடுதி கட்டப்படும் என்று மத்திய பட்ஜெட் 2026-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

‘பாரத் விஸ்தார்’ அறிமுகம்:

விவசாய வளங்களை அணுகுவதற்கான ஒருங்கிணைந்த ஒரு மெய்நிகர் அமைப்பு பாரத் விஸ்தார். விவசாயத் துறை சார்ந்த இணையதளங்களையும், விவசாய நடைமுறைகள் குறித்த இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) தொகுப்பையும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் ஒரு பன்மொழி செயற்கை நுண்ணறிவு கருவியான ‘பாரத் விஸ்தார்’ அறிமுகப்படுத்தப்படும்.

மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வுக்கான பங்கீட்டை 41% ஆக தக்கவைத்துக் கொள்ளுமாறு 16-வது நிதிக் குழு அளித்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. 2026-27 நிதியாண்டுக்காக மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

17 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி இல்லை!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 17 மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவுகளைத் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கும் நோக்கத்திற்காக, மேலும் 7 அரிய நோய்களைச் சேர்ப்பதாகவும் அறிவிப்பு.

டிசிஎஸ் தொடர்பான அறிவிப்புகள்:

> மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தால் ஒரு தனிநபருக்கு வழங்கப்படும் எந்தவொரு வட்டிக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இது தொடர்பான எந்தவொரு டிடிஎஸ் பிடித்தமும் ரத்து செய்யப்படும்.

> வெளிநாட்டு சுற்றுலாத் திட்டங்கள் (overseas tour program package) விற்பனை மீதான டிசிஎஸ் வரியை, தற்போதுள்ள 5% மற்றும் 20% என்பதிலிருந்து, எந்தவித தொகை வரம்பும் இல்லாமல் 2% ஆகக் குறைக்கப்படும்.

> தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டம் (LRS) எனப்படும் திட்டத்தின் கீழ், கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான டிசிஎஸ் (TCS) வரியை 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.

20%-ல் இருந்து 10% ஆக குறையும் இறக்குமதி வரி!
தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி அமைப்பை முறைப்படுத்தும் வகையில், தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் வரி விதிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சுங்க வரியை 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்படும்.

அணுசக்தி திட்டங்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்க வரி விலக்கை 2035 வரை நீட்டிக்கவும், அதன் கொள்ளளவு வேறுபாடின்றி அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்தவும் நடவடிக்கை.

நமது பிராந்திய நீர்ப்பரப்புக்கு அப்பால் உள்ள கடல் வளங்களின் பொருளாதார மதிப்பை இந்திய மீனவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆதரவளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:

1. பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் அல்லது ஆழ்கடலில் ஒரு இந்திய மீன்பிடிப் படகால் பிடிக்கப்படும் மீன்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்.

2. அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை ஒரு வெளிநாட்டுத் துறைமுகத்தில் இறக்குவது, சரக்குகளின் ஏற்றுமதியாகக் கருதப்படும். மீன்பிடிப்பு, போக்குவரத்து அல்லது இடமாற்றம் செய்யப்படும்போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்புத் துறையில் உள்ள பிரிவுகளால் பராமரிப்பு, பழுதுபார்ப்பு அல்லது முழுமையான சீரமைப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் விமானங்களின் பாகங்களைத் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய கனிமங்களை பதப்படுத்தும் பணிகளுக்குத் தேவையான மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

புதிய மலைப் பாதைகள்: இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் நிலையான மலைப் பாதைகள் உருவாக்கப்படும். சூழலுக்கு ஏற்றதாக இந்தப் பாதை அமைக்கப்படும்.

தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றமில்லை!

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

எளிமையாக்கப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இதன்மூலம் வரி செலுத்துவோர் புதிய தேவைகளைத் தெரிந்துகொள்ள போதுமான அவகாசம் கிடைக்கும்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, ​​புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வரி விதிப்பு முறையின் கீழ், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 லட்சம் வரை மொத்த வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in