நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு நீடா கான் கைது - பின்புலம் என்ன?

நீடா கான்

நீடா கான்

Updated on
1 min read

நாசிக்: நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பிபிஓ பிரிவில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு முயன்றது தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நீடா கான் கைது செய்யப்பட்டார். 25 நாட்களாகத் தலைமறைவாக இருந்த இவரை, நாசிக் காவல்துறையினரின் சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரத் தேடலுக்குப் பின் பிடித்துள்ளது.

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் 18 முதல் 25 வயதுடைய பெண் ஊழியர்களுக்கு அங்கிருந்த சில மூத்த அதிகாரிகள் மற்றும் குழுத் தலைவர்கள் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், மத ரீதியாக துன்புறுத்தியதாகவும் கடந்த மாதம் புகார்கள் எழுந்தன.

இதில் நீடா கான், பாதிக்கப்பட்ட பெண்களைப் புகார் அளிக்க விடாமல் தடுத்ததுடன், அவர்களைக் கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணிய சொன்னது, மற்றும் மதமாற்றத்திற்குத் தூண்டியது போன்ற புகார்களுக்கு உள்ளானார். மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மற்ற நபர்களுக்கும் அவர் உடந்தையாக இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மதமாற்ற முயற்சிக்கும் மாலேகான் மற்றும் மலேசியா போன்ற இடங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை மதமாற்றம் செய்யத் திட்டமிட்டனரா என்ற கோணத்தில் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், நீடா கான் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், மின்னணு ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆராய்ந்த நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் இதுவரை டேனிஷ் ஷேக், தௌசிப் அத்தார், ரசா மேமன், ஷாருக் குரேஷி உட்படப் பல ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, பாலியல் புகார்களை விசாரிக்கும் 'போஷ்' குழுவில் இருந்த அஷ்வின் சைனானி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில், நீடா கானின் கணவரிடம் விசாரணை நடத்திய பிறகு, அவர் தலைமுறைவாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்களில் போலீஸார் சோதனையிட்டனர். இருப்பினும், அந்த இடங்கள் பூட்டப்பட்டு கிடந்ததைக் கண்ட அதிகாரிகள், நீடா கானின் செல்போன் மற்றும் அவரது உறவினர்கள் சிலருடைய செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டனர்.

இதனையடுத்து சத்ரபதி சம்பாஜி நகரில் நீடா தலைமறைவாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடங்கி ஏறக்குறைய 25 நாட்களுக்குப் பிறகு நீடா கான் கைது செய்யப்பட்டள்ளார். 

<div class="paragraphs"><p>நீடா கான்</p></div>
118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மீண்டும் உறுதி: விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in