118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மீண்டும் உறுதி: விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிப்பு

திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சி தீவிரம்
தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய்

Updated on
2 min read

சென்னை: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

இதன்பிறகு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பிய விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரும் நடவடிக்கையில் தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கினர். சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பார்கள். விஜய் ஏற்கெனவே கூறியபடி, எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் கட்டாயம் பங்கு வழங்கப்படும்’’ என்றார்.

சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். அவரிடம் காதர் மொகிதீன், ‘‘நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் சொன்னால் ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அழைக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம் - ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் 2-வது நாளாக நேற்றும் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்றும், அழைக்கவில்லை என்றும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின. இதனால், விஜய் முதல்வராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு என்பது, ஆட்சி அமைப்பதற்கு இன்றியமையாதது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை இந்த சந்திப்பின்போது ஆளுநர் விளக்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தவெக தலைவர் விஜய்</p></div>
ஆர்சிபி அணியை 9 ரன்களில் வீழ்த்தியது எல்எஸ்ஜி: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in