

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேய ஆட்சியின் அடையாளத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு 2023-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதோடு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,189 கோடி செலவில் பிரதமர் அலுவலகம் (சேவா தீர்த்) கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சுமார் 5 ஏக்கர் பரப்பில் புதிய பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதில் சேவா தீர்த் 1, சேவா தீர்த் 2, சேவா தீர்த் 3 என்ற பெயரில் 3 பிரதான கட்டிடங்கள் உள்ளன.
இதில் சேவா தீர்த் 1 கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் செயல்படும் சேவா தீர்த் 2 கட்டிடத்தில் கேபினட் செயலாளர் அலுவலகம் செயல்படும். சேவா தீர்த் 3 கட்டிடத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அலுவலகம் செயல்படும்.
மேலும் மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியாக கர்த்தவ்ய பவன் 1, கர்த்தவ்ய பவன் 2 கட்டிடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இவற்றில் நிதியமைச்சகம், பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, கார்ப்பரேட் விவகாரம், கல்வி, கலாச்சாரம், சட்டத் துறை, தகவல்- ஒலிபரப்புத் துறை, வேளாண் துறை, ரசாயனத் துறை, பழங்குடியினர் நலத் துறை ஆகியவை செயல்படும்.
பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் ரூ.467 கோடி செலவில் 36,000 சதுர அடி பரப்பளவில் பிரதமரின் வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு செல்ல பிரத்யேக சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு விரைவில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய பிரதமர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் கால சின்னங்கள் ஆகும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது கொள்கைகளில் மட்டுல்ல, நமது நாட்டின் பணியிடங்கள், கட்டிடங்களிலும் எதிரொலிக்க வேண்டும். வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சேவா தீர்த், கர்த்தவ்ய பவன் அலுவலகங்களில் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு ஊழியர்கள் கால் பதிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
ஸ்டார்ட் அப் 2.0 திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு: புதிதாக திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது அன்றாட அலுவல்களை தொடங்கினார். குறிப்பாக லட்சாதிபதி சகோதரிகள், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி, ஸ்டார்ட் அப் நிதியம் 2 .0 திட்டம் தொடர்பான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் ஸ்டார்ட் அப் நிதியம் 2.0 திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் கீழ் மகளிர் சுயநிதி குழுக்களை சேர்ந்த 1.48 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்பட்டு உள்ளனர். வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த எண்ணிக்கையை 3 கோடியாகவும் வரும் 2029 மார்ச் மாதத்தில் 6 கோடியாகவும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுதொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண்மை சங்கங்களுக்கு 3 சதவீத வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியம் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுகிறது. இந்த நிதியத்தின் முதலீட்டு தொகை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.
சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு 7 நாட்கள் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.