

ராகுல் காந்தி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே
புதுடெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதியுள்ள வெளியிடப்படாத புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்களை காட்டினார்.
அதில், சீனா நமது எல்லைக்குள் ஆக்கிரமித்துள்ளது என்று அவர் கூறினார். அதற்கு ஆளும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை விதிகளுக்கு மாறாக வெளிவராத புத்தகத்தில் இருந்து ராகுல் காந்தி பேசுவதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், அவை விதிகள் மரபுகளை மீறி பேசிய ராகுல் காந்தியைப் பதவி நீக்கும் தீர்மானத்தை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கொண்டு வந்தார். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விதிகளை மீறி பேசி வரும் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த், தனிப்பட்ட எம்.பி. என்ற முறையில் அல்லது தனி உறுப்பினர் என்ற முறையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். எனவே, மத்திய அரசு சார்பில் கொண்டு வர திட்டமிட்டிருந்த ராகுலுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை நாங்கள் கைவிடுகிறோம்.
நிஷிகாந்த் துபே கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு மக்களவையில் அனுமதி வழங்கப்பட்டால், அதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதா அல்லது நெறிமுறை குழுவுக்கு அனுப்புவதா என்பது குறித்து ஆலோசனை செய்வோம். அல்லது மக்களவையில் நேரடியாக தீர்மானத்தை கொண்டு வருவதா என்பது குறித்தும் சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம்.
மக்களவை விதிகளை ராகுல் காந்தி மீறியுள்ளார். அதனால் அவருக்கு நோட்டீஸ் வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. பிரதமரைப் பற்றியும் தவறாக பேசியுள்ளார். ஆனால், நிஷிகாந்த் துபே தீர்மானம் கொண்டு வந்துவிட்டதால், மத்திய அரசு தீர்மானம் கொண்டு வருவதை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறினார்.