கர்நாடக எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக கூட்டணி புகார்

கர்நாடக எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக கூட்டணி புகார்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பாஜக தலைமையிலான என்டிஏ தலைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, குமாரசாமி, ஷோபா கரந்தலேஜி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அஷோகா, சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சாலவாடி நாராயணசுவாமி, முன்னாள் துணை முதல்வர்கள் கோவிந்த் கர்ஜோல், அஸ்வத் நாராயண் உள்ளிட்டோர், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அன்புகுமாரை நேரில் சந்தித்து முறைப்படி புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், ‘கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான பணிகளில் பெரும் முறைகேடுகள் நடைபெறுவது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறோம். எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை சிறிதும் மதிக்காமல் செயல்படுவது ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், கட்டாயமாக வீடு வீடாகச் சென்று சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலுள்ள உறுப்பினர்களின் அடையாளத்தை நேரில் சரிபார்க்க வேண்டும். ஆனால், களத்தில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதற்கான ஆதாரங்கள் சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன.

சமுதாயக் கூடங்கள், மசூதிகள், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் (BLOs) வீடுகளில் அமர்ந்து கணக்கெடுப்புப் படிவங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், இதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாககப்பட்டு அதன் மூலம் இந்தக் கூடங்களுக்கும் மசூதிகளுக்கும் வருமாறு மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற நடைமுறை, நிறுவப்பட்ட எஸ்ஐஆர் வழிகாட்டுதல்களை மீறுவதாகும். இது தேர்தல் செயல்முறையின் நடுநிலைத்தன்மை மற்றும் மதச்சார்பற்ற தன்மை குறித்த தீவிர கவலைகளை எழுப்புகிறது.

வாக்காளர் பட்டியலை வலுப்படுத்தவே எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது. ஆனால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியை மேற்கொள்ளும் விதம், அதன் நோக்கத்தையே சீர்குலைப்பதாக உள்ளது. இது நம்பகத்தன்மையற்ற வாக்காளர் பட்டியலையே உருவாக்கும். இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளில் இருந்து விலகுவதை அனுமதிக்க முடியாது.

இது குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். கட்டாயமாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து கணக்கெடுப்புப் படிவங்களும் மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும்.

மேலும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. ஜூலை 29 வரை இந்தப் பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக கூட்டணி புகார்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: கூடுதல் குற்றப்பத்திரிகையில் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in