கோப்புப் படம்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளும், ஓர் உள்ளூர் நபரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பஹல்காம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த வழக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ, 1,597 பக்கங்கள் கொண்ட முதன்மை குற்றப்பத்திரிகையை ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் ஜாட், ஜூலை 2025-ல் நடத்தப்பட்ட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள், கைது செய்யப்பட்ட இருவர் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹபீஸ் சயீத்தின் பெயர், தனிப்பட்ட முறையிலும், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் ஆகியவற்றின் தலைவர் என்ற முறையிலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா மற்றம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.