

என்.சி.பி.செயல் தலைவர் சுப்ரியா சுலே
மும்பை: அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 % அதிகரிக்கப்பட்டால் மட்டுமே தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பது குறித்து தங்கள் கட்சி பரிசீலிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில் மக்களவை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செயல் தலைவரும் பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து மாநிலங்களுக்கும் சமமான விகிதத்தில் மக்களவை இடங்கள் 50 % அதிகரிக்கப்படுவதை உறுதி செய்தால் மட்டுமே, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பது குறித்து எங்கள் கட்சி பரிசீலிக்கும்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு ஆகியோருடனான சந்திப்பின்போது, இந்த சட்டம் குறித்து எங்கள் கட்சியின் ஆட்சேபனைகளை தெரிவித்தோம். தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்யும் போது அரசு கையாளக்கூடிய சூத்திரம் குறித்து எங்களுக்கு கவலைகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.