

சரண் அடைந்த கொரில்லா பிரிவின் கமாண்டர் பர்ஸா தேவா
ஹைதராபாத்: தெலங்கானாவில் நக்சலைட் கமாண்டர் மல்லா தனது சகாக்கள் 40 பேருடன் ஹைதராபாத் போலீஸார் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார்.
நக்சலைட்கள் இல்லா நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் பலர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். மேலும் அரசின் பொதுமன்னிப்பு மற்றும் மறுவாழ்வு கொள்கை காரணமாக நக்சலைட்கள் பலர் தாமாக முன்வந்து சரண் அடைந்தனர்.
தெலங்கானாவில் கடந்த ஜனவரி 2-ம் தேதி, கொரில்லா பிரிவின் கமாண்டர் பர்ஸா தேவா என்கிற தேவண்ணா சரண் அடைந்தார். பிறகு கடந்த பிப்ரவரி 22ம் தேதி மத்திய நக்சலைட் இயக்க உறுப்பினர் திப்பிரி திருப்பதி என்கிற தேஜி (62), சீனியர் நக்சலைட் மல்லா ராஜி ரெட்டி உட்பட 20 பேர் சரண் அடைந்தனர். மேலும் 120 நக்சலைட்கள், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் கடந்த மார்ச் 7-ம் தேதி ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் நக்சலைட் கொரில்லா பிரிவின் முக்கிய நபராக செயல்பட்டு வந்த சோதி கேஷாலு என்கிற மல்லா நேற்று தனது சகாக்கள் 40 பேருடன் ஹைதராபாத்தில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர். அப்போது ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை இவர்கள் ஒப்படைத்தனர்.
பொது மன்னிப்பு: தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லைப் பகுதியில் உதவி கமாண்டராக மல்லா பல ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். பதிசே தேவா எனும் சீனியர் நக்சலைட் ஏற்கெனவே சரண் அடைந்த நிலையில், அவரது பணிகளை மல்லா கவனித்து வந்துள்ளார். இவரது தலைக்கு போலீஸார் ரூ.20 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர். இந்நிலையில் சரண் அடைந்த மல்லா உள்ளிட்ட 41 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.