

புதுடெல்லி: தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ள லிஜிமோல் ஜார்ஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் சுமார் 14.72 லட்சம் பள்ளிகளில் 98 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும், இதில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மட்டும் 37.30 லட்சம் ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் எனும் இன்றியமையாத பொதுப் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர்களின் அரசியலமைப்பு உரிமைகள், கண்ணியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொது நலனைப் பாதுகாத்து நிலைநிறுத்தும் வகையில், “தேசிய தனியார் பள்ளி ஆசிரியர் நல வாரியம்” ஒன்று அமைக்கப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதிய திட்டம், பணிக்கொடைகள், மருத்துவக் காப்பீடு, ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் விரிவான சட்டக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய உத்தரவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிறப்பிக்குமாறும் மனுவில் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.