

இந்திய அரசியல் என்பது ஒரே வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியம் அல்ல; அது பல்வேறு மாநில அடையாளங்கள், மொழிகள், பண்பாடுகளின் அழகிய கலவையான நவீன ஓவியம்.
சமீப ஆண்டுகளில் இந்திய அரசியலில் நிகழும் மாற்றங்கள், மாநிலக் கட்சிகளின் எதிர்காலம் குறித்தும், அவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றனவா என்பது குறித்தும் பலமான விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
மாநிலக் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
தேசியக் கட்சிகளின் தீவிர விரிவாக்கம், நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களில் ஏற்படும் இடைவெளி, உட்கட்சிப் பூசல்கள், கட்சித் தாவல் அலைகள் மற்றும் மாறிவரும் புதிய தலைமுறை வாக்காளர்களின் மனநிலை ஆகியவை மாநிலக் கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
சமீப காலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த பல மாநிலங்களில் உட்கட்சிப் பூசல்களும் கட்சித் தாவல்களும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளில் நடந்த பிளவுகளும், கட்சித் தாவல்களும் மாநிலக் கட்சிகளின் அமைப்பு ரீதியான பலவீனங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
இருப்பினும், இத்தகைய அமைப்பு ரீதியான பின்னடைவுகள் மட்டுமே ஒரு கட்சியின் மக்கள் ஆதரவுத் தளம் சுருங்கிவிட்டதாகக் கூறிவிட முடியாது.
ஆட்சி அதிகாரமும் வாக்கு வங்கியும்
தற்போது பாஜக 11 மாநிலங்களிலும், காங்கிரஸ் 3 மாநிலங்களிலும் ஆட்சி செய்கின்றன. மாநிலக் கட்சிகள் தனித்து 4 மாநிலங்களிலும், கூட்டணியாக 10 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளன.
2015 - 2020 காலக்கட்டத்தில் 9 மாநிலங்களில் தனித்து ஆட்சியில் இருந்த மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்திருந்தாலும், அவற்றுக்கான வாக்கு வங்கி சரிவைச் சந்திக்கவில்லை.
ஒரு கட்சியின் உண்மையான ஆதரவுத் தளம் என்பது தேர்தலில் அது பெறும் வாக்கு சதவீதமே ஆகும். நாடாளுமன்றத் தேர்தல்களைவிட, மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் பிராந்தியக் கட்சிகளுக்கு வாக்காளர்கள் தொடர்ந்து வலுவான முன்னுரிமையை அளிக்கிறார்கள். இது மாநில அளவிலான அரசியல் அடையாளங்களின் நீண்டகால முக்கியத்துவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் தெளிவாகக் காட்டுகிறது.
மக்களவைத் தேர்தல் வாக்கு விகிதப் பகுப்பாய்வு (2009 - 2024)
கடந்த 4 மக்களவைத் தேர்தல்களிலும் தேசியக் கட்சிகளின் மொத்த வாக்கு விகிதம் 60% முதல் 68% வரை நிலைத்து நிற்கிறது. அதேவேளையில், மாநிலக் கட்சிகள் ஒட்டுமொத்த வாக்குகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கை (30% - 35%) தொடர்ந்து தக்கவைத்துள்ளன.
மக்களவைத் தேர்தல் வாக்கு விகிதம்:
காங்கிரஸ்:
2009 - 28.55%,
2014 - 19.31%,
2019 - 19.48%,
2024 - 21.19%
பாஜக:
2009 - 18.8%,
2014 - 44.0%,
2019 - 37.3%,
2024 - 36.56%
மாநிலக் கட்சிகள் (தனித்து):
2009 - 31.22%,
2014 - 36.86%,
2019 - 28.09%,
2024 - 33.52%
காங்கிரஸ் + மாநிலக் கட்சி கூட்டணி:
2009 - 5.74%,
2014 - 2.16%,
2019 - 5.53%,
2024 - 11.46%
பாஜக + மாநிலக் கட்சி கூட்டணி:
2009 - 5.3%,
2014 - 7.35%,
2019 - 7.37%,
2024 - 14.90%)
வாக்கு விகிதமும் தேர்தல் முடிவுகளும் எப்போதும் ஒரே திசையில் பயணிப்பதில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. தேர்தல் முடிவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், மாநிலக் கட்சிகளுக்கான ஒட்டுமொத்த ஆதரவுத் தளம் பெரிதாக மாறாமல் நிலையாகவே உள்ளது.
தமிழக சட்டப்பேரவை | கோப்புப் படம்
தமிழகத்தின் தேர்தல் வாக்கு விகிதச் சூழல்
தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே தொடர்ந்து மேலோங்கியுள்ளது:
2014 மக்களவைத் தேர்தலில், தேசியக் கட்சிகள் 11.26% வாக்குகளும், மாநிலக் கட்சிகள் 85.17% வாக்குகளும் பெற்றன. 2019 மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சிகள் 21.13%, மாநிலக் கட்சிகள் 70.43% வாக்குகள் பெற்றன. 2024 மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சிகள் 24.77%, மாநிலக் கட்சிகள் 71.52% வாக்குகள் பெற்றன.
தமிழகத்தில் ஒரு மாநிலக் கட்சி தேர்தல் பின்னடைவைச் சந்திக்கும்போது, அந்த வெற்றிடத்தை மற்றொரு மாநிலக் கட்சியே நிரப்புகிறதே தவிர, தேசியக் கட்சிகளால் அதை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவதில்லை. உதாரணமாக, தமிழகத்தில் நடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில், அந்த இடத்தை தவெக எனும் மாநிலக் கட்சிதான் நிரப்பியது.
மாநிலக் கட்சிகளுக்கான சிக்கல்கள்:
> வலுவான நிர்வாக அமைப்பு, நவீன தேர்தல் உத்திகள் மற்றும் பெரும்பான்மை வாக்கு வங்கி, நிதி ஆகியவற்றைப் பயன்படுத்தி தேசியக் கட்சிகள் மாநில அளவிலான அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
> தேசியக் கட்சிகளின் வருகையால் கடந்த சில பத்தாண்டுகளாக தனித்து இயங்கிய மாநிலக் கட்சிகள் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளன.
> நவீன டிஜிட்டல் பிரச்சாரங்கள், தரவுப் பகுப்பாய்வு மற்றும் வலுவான நிதிப் பின்புலம் ஆகியவை தேசியக் கட்சிகளுடன் போட்டியிட இயலாமல் மாநிலக் கட்சிகள் பின்தங்குகின்றன.
> தனிநபர் அல்லது குடும்ப அரசியல், குடும்ப கட்சி என்ற அடையாளத்தில் மாநிலக் கட்சிகள் இயங்குகின்ற என்ற விமர்சனம், புதிய தலைமுறை வாக்காளர்களின் பார்வையை மாற்றியுள்ளது.
மாநிலக் கட்சிகளின் எதிர்காலத் தேவை
மாநிலக் கட்சிகளின் சகாப்தம் முடிந்துவிடவில்லை என்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. ஆனால், புதிய சூழல்களை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் உருமாற்றக் கட்டத்தில் உள்ளன.
வெறும் ‘மொழி மற்றும் அடையாள அரசியல்’ என்பதைக் கடந்து ‘வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் நல்லாட்சி’ என்ற மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
பன்முகத்தன்மையை அடித்தளமாகக் கொண்ட ஜனநாயகத்தில், மாநிலக் கட்சிகளின் வலுவான பங்களிப்பு இல்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆன்மாவும் அதிகாரப் பகிர்வும் முழுமையடையாது என்பதே மறுக்க முடியாத நிதர்சனம்.