

புதுடெல்லி: சுதந்திர தின விழாவின்போது வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆட்சேபம் தெரிவித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது பாடலின் இடையே குறுக்கிட்டு சோனியா காந்தி ஏதோ சைகை செய்தார். இருந்தபோதும், வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கார்கே, தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால் கூறும்போது, “சுதந்திர தினமான இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ள காட்சி மிகவும் அவமானகரமாக உள்ளது.
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படும்போது சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததும், அது ஏன் இசைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் கேள்வி எழுப்பியதும் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது, ‘வந்தே மாதரம்’ என்பது வெறும் பாடல் மட்டுமல்ல, அது இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், தேசிய உணர்வு மற்றும் தேசபக்தியின் வரலாற்றுச் சின்னம். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்துக்கு உரிமை கோரும் அதே காங்கிரஸ் கட்சிதானா இது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறும்போது, “விழாவின்போது காங்கிரஸ் தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அவருக்கு ஒரு நாற்காலியை வழங்குமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டிருந்தார்.
1937-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி கல்கத்தாவில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபபாய் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, கோவிந்த் வல்லப் பந்த், சி.ராஜகோபாலாச்சாரி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின் பேரில், காங்கிரஸ் கூட்டங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆரம்பப் பகுதிகள் மட்டும் பாடப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் சில பத்திகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நேரு மற்றும் போஸ் ஆகியோருக்கு தாகூர் ஆலோசனை வழங்கினார். அப்போதிருந்து ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த வரிகளை நாங்கள் பாடி வருகிறோம்; எங்கள் சேவா தளம் மற்றும் தொண்டர்கள் அதைப் பாடுகின்றனர். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவமதிக்கவில்லை" என்றார்.