

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கிளை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளரைப் போல ஒரு நபர் வந்தார். அவர் சிவப்பு நிறகுர்தாவும், கருப்பு நிற பைஜாமாவும் அணிந்திருந்தார்.
அவர் நேராக கேஷ் கவுன்ட்டர் அருகே வரும்போது தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு, பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வங்கி ஊழியர்கள் கண்ணில் தூவினார். கண்ணில் மிளகாய் பொடி பட்டதும் வங்கி ஊழியர்கள் அலறித் துடித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், கவுன்ட்டரிலிருந்த ரூ.4 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தப்பினார். அவரைப் பிடிக்க ஊழியர்களும், வங்கிக் காவலாளியும் முயன்றனர். ஆனால் வங்கியில் இருந்த கூட்டத்தைப் பயன்படுத்தி தப்பியோடினார். இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து வங்கிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்த பதிவுகளை சோதனை செய்தனர்.
இதையடுத்து மர்ம நபர் தப்பியோடிய திசையை வைத்து ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்தனர். இந்நிலையில் வங்கிக் கிளைக்கு சற்று தொலைவில் அந்த மர்ம நபரை, போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய அரை மணி நேரத்திலேயே அவரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.