

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு செல்வாக்கை அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க முடியாமல், தேர்தலின் போது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது எதிர்க்கட்சிகள் வேறுவகையான மாற்றங்களைச் செய்து வருகிறது.
குறிப்பாக மாநில சட்டப்பேரவைகளில் முஸ்லிம் எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு 339 ஆக இருந்தது. தற்போது அது 282 ஆக குறைந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் சுமார் 25 சதவீத முஸ்லிம்கள் உள்ள சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்கள் 403. ஆனால், தற்போது 31 முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதற்கு முன் உ.பி.யில் 63 முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் இருந்துள்ளனர். இதேபோல் பிஹாரில் 19-ல் இருந்து 11, ராஜஸ்தானில் 11-ல் இருந்து 6 ஆக முஸ்லிம் எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முறையே 8 மற்றும் 9 முஸ்லிம் வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது. ஆனால், அசாமில், அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். அதன்பின் கட்சியில் சிறுபான்மையினர் பிரிவையே பாஜக கலைத்து விட்டது. இந்த முறை 2 மாநிலங்களிலும் ஆட்சி அமைத்த பாஜக, ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. தேசிய அளவில் மணிப்பூரைச் சேர்ந்த அச்சப் உத்தின் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த தபஸ்ஸுல் ஹுசைன் ஆகிய 2 பேர் மட்டுமே பாஜக.வில் முஸ்லிம் எம்எல்ஏ.க்களாக உள்ளனர். முஸ்லிம் எண்ணிக்கைக்கும் மாநில சட்டப்பேரவைகளில் அதன் உறுப்பினர்களுக்குமான இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 30 சதவீதம் இருந்தும் சட்டப்பேரவையில் 12.6 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.
பிஹாரில் 17 சதவீத முஸ்லிம்கள் இருந்தும் பேரவையில் 4.5 சதவீதம் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் முஸ்லிம்கள் 10 சதவீதத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். ஆனால், சட்டப்பேரவைகளில் 3 முதல் 4 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
தேசிய அளவில் அதிகபட்சமாக சட்டப்பேரவைகளில் 61 முஸ்லிம் எம்எல்ஏ.க்களுடன் காங்கிரஸ் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியில் 39 பேர் உள்ளனர். அடுத்தடுத்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் 37 மற்றும் சமாஜ்வாதி 34 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. கேரளாவில் மட்டும் வலுவான நிலையில் 26.56 சதவீத முஸ்லிம்களில் 25 சதவீதம் பேர் வென்றுள்ளனர். இவர்கள் ஆளும் காங்கிரஸ் 8, ஐயுஎம்எல் 22 எனவும், எதிர்க்கட்சி கூட்டணியில் சிபிஎம் 4 மற்றும் சிபிஐ 1 என முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் திமுக 3, ஐயுஎம்எல் 2, தவெக மற்றும் காங்கிரஸ் தலா 1 முஸ்லிம்களை வைத்துள்ளன. புதுச்சேரியில் 6.05 சதவீத முஸ்லிம்கள் இருந்தும் அவர்களில் ஒருவர் கூட இடம்பெறவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் 59 என்றிருந்த இவர்களின் எண்ணிக்கை தற்போது முடிந்த தேர்தலில் 37 எனக் குறைந்துள்ளது.
எனினும், இது பாஜகவால் மட்டும் நிகழும் மாற்றமல்ல. நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் இதே நிலைமை தொடர்கிறது. பல மாநிலங்களில், சில கட்சிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, மிகப்பெரிய தேர்தல் வெற்றிகளைப் பெற்றுள்ளன. இச்சூழல், எதிர்க்கட்சிகளைச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை சமூகக் கட்டமைப்புகளுடன் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது.