

புதுடெல்லி: இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேற்று தெரிவித்தார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், இந்தியாவில் உள்நாட்டு வர்த்தக சக்திகளால் தங்களுக்கு உரிமம் வழங்கப்படாமல் தடுக்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிந்தியா கூறியதாவது: இந்தியாவில் எந்தத் துறையிலும் ஏகபோகத்திற்கு இடமில்லை. செயற்கைக்கோள் இணையச் சேவையைப் பொறுத்தவரை, சேவை வழங்க விரும்பி விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றியே (ஸ்டார்லிங்க்) அதிக அளவில் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ, ஒன்வெப், மற்றும் ஸ்டார்லிங்க் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் அலைக்கற்றைக்கான கட்டண முறை மற்றும் விலை நிர்ணயம் குறித்து டிராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆலோசித்து வருகின்றன.
இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எட்டப்படும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்குரிய பாதுகாப்பு நிபந்தனைகளையும் முன் தேவைகளையும் தனித்தனியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பாதுகாப்புச் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நிறுவனங்கள் மட்டுமே அடுத்த கட்டமாகத் தங்களின் வர்த்தகச் சேவைகளைத் தொடங்க முடியும். இந்த விதிகள் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானவை. இவ்வாறு சிந்தியா தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளாக இந்திய விதிகளுக்குட்பட்டுச் செயல்பட்டும், சக்திவாய்ந்த தொழிலதிபர்களின் தலையீட்டால் ஸ்டார்லிங்க் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், உரிமம் பெற்ற மூன்று நிறுவனங்களும் ஒரே சீரான விதிமுறைகளின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன; எந்தவொரு நிறுவனத்துக்கும் பாகுபாடு காட்டப்படவில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.