

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர், அவரது குடும்பத்தார் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அந்தப் பெண்ணின் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை போலீஸ் நிலைய காப்பக அறையில் வைத்தனர். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்ணின் கணவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்திலுள்ள தங்க நகைகளை தங்களிடம் தருமாறு கணவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அப்போது போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியதாவது: கடந்த 2013-ல் கடும் மழை பெய்த போது காப்பக அறையில் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் நனைந்துவிட்டன. அவற்றை உலர வைப்பதற்காக காப்பக அறையின் மேல் திறந்தவெளியில் வைத்திருந்தோம்.
அப்போது அறையின் மேல்பகுதிக்கு எங்கிருந்தோ வந்த குரங்குக் கூட்டம் தங்க நகைளை வீசி எறிந்தும், உடைத்தும் பாழ்படுத்திவிட்டன. மேலும் தங்க நகைகளை குரங்குகளே எடுத்துச் சென்றுவிட்டன. அந்த தங்க நகைகளை எங்களால் மீட்க முடியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், போலீஸார் அளித்த தகவலை லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் ஏற்கவில்லை. இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி லக்கிம்பூர் மாவட்ட போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், போலீஸ் அறையின் காப்பகத்தில் அதிகாரிகளாகச் செயல்பட்ட சந்திரிகா பிரசாத், ராம்பக்ஸ் பால் ஆகியோர் 2007 மற்றம் 2009-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இறந்துவிட்டனர். எனவே, இந்த வழக்கில் மேலும் விசாரணையை நீட்டிக்க முடியவில்லை. வழக்கை முடித்துவிடலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் போலீஸ் நிலையத்தில் காப்பாளர்களாக இருந்த போலீஸாரின் பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர்களும், போலீஸார் பிரமாணப் பத்திரத்தில் உள்ள பெயர்களும் ஒத்துப்போகவில்லை. காப்பக அறையின் பொறுப்பாளர்களாக மோல்ஹேராம், ரமாகாந்த் திவாரி, மேவராம், ஈஸ்வர் தயாள் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். இதில் ஈஸ்வர் தயாள் மட்டுமே இறந்துவிட்டார்.
ஆனால், பிரமாணப் பத்திரத்தில் சந்திரகாந்த் பிரசாத், ராம்பக்ஸ்பால் ஆகியோரது பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது என்று பெண்ணின் கணவரது சார்பில் வாதாடும் வழக்கறிஞர் சைலேந்திர கவுட் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.